எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் பரம எதிரி டிடிவி தினகரன் பெயர்; எடப்பாடி கிளவர் மூவ்..என்ன செய்ய போகிறார் கூல் டிடிவி?

 

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் பரம எதிரி டிடிவி தினகரன் பெயர்; எடப்பாடி கிளவர் மூவ்..என்ன செய்ய போகிறார் கூல் டிடிவி?

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெயரும் அச்சிடப்பட்டுள்ளது

சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெயரும் அச்சிடப்பட்டுள்ளது.

அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதனையடுத்து மதுரையில் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவானது 31-வது மாவட்டமாக கண்ணியாளுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் தொடங்கிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, தலைநகர் சென்னையில் வருகிற 30-ம் தேதி நிறைவு பெறுகிறது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த அக்கறை காட்டி வரும் நிலையில், நிறைவு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுடன் இணைந்து தமிழ்நாடு பொன் விழாவும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி எம்ஜிஆர் திருவுருவப் படத்தை திறந்து வைத்து நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிடவுள்ளார். தமிழ்நாடு பொன் விழா ஆண்டையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், காசோலை, பாராட்டு சான்றிதழ் வழங்கி நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கவுள்ளார்.

நிகழ்ச்சிக்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் வாழ்த்துரை பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின், திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பெயர்களும் வாழ்த்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயமாக அழைப்பிதழின் வாழ்த்துரை பட்டியலில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வும், ஈபிஎஸ்-ஓபிஎஸ்-ன் பரம எதிரியுமான டிடிவி தினகரனின் பெயரும் இடம்பெறுள்ளது. இதனை டிடிவி-க்கு எடப்பாடி குரூப் விடுக்கும் சவாலாகவே பார்க்க வேண்டியுள்ளது. தினகரனை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. முடிந்தால் நேரில் வா என்று சொல்லாமல் சொல்லும் விதத்தில் இது அமைந்துள்ளது. ஒருவேளை நிகழ்ச்சியை தினகரன் புறக்கணிக்கும் பட்சத்தில் எங்களை பார்த்து அவர் பயப்படுகிறார் என மேடை போட்டு வீதிக்கு வீதி பேசுவர் அதிமுக-வினர். அதேசமயம், அவர் கலந்து கொண்டால் எம்எல்ஏ-க்களோடு எம்எல்ஏ-வாக ஒரு ஓரத்தில் இடம் கொடுத்து அமர வைத்து நோஸ்கட் கொடுப்பார்கள் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், எதையும் கூலாக சமாளிக்கும் டிடிவி தினகரனோ இதனையும் கூலாக சமாளிப்பார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். கூல் டிடிவி தினகரனின் மூவ் எப்படி இருக்கிறது என பொறுத்திருந்து தான பார்க்க வேண்டும்..!!