எம்ஜிஆர் சிகிச்சை விவரங்களை கொடுங்கள்: அப்பல்லோவிடம் அதிரடி காட்டும் விசாரணை ஆணையம்

 

எம்ஜிஆர் சிகிச்சை விவரங்களை கொடுங்கள்: அப்பல்லோவிடம் அதிரடி காட்டும் விசாரணை ஆணையம்

சென்னை: எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை அளிக்கும்படி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அப்பல்லோ மருத்துவமனையிடம் கேட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையம் பலரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்று வருகிறது. இதற்கிடையே உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஜெயலலிதாவை சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு ஏன் கொண்டுசெல்லவில்லை என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது.

மேலும் ஜெயலலிதாவை அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல அப்பல்லோ மருத்துவமனை மறுத்துவிட்டதாக துணை ஓ.பன்னீர்செல்வம் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி தெரிவித்திருந்தார். அவரது இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விவரங்களையும் எம்ஜிஆரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல எதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது? அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அமெரிக்காவிற்கு அவரை அழைத்துச் செல்வது தொடர்பாக அமைச்சரவையில் எடுத்த முடிவு யார் மூலம் மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது? என்ற விவரங்களையும் ஆணையம் கேட்டுள்ளது. இந்த விவரங்களை வரும் 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கடந்த  1984-ம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.