என் மகள் சவுந்தர்யா திருமணத்துக்கு காரணம் திருநாவுக்கரசர்: ரஜினிகாந்த் விளக்கம்

 

என் மகள் சவுந்தர்யா திருமணத்துக்கு காரணம் திருநாவுக்கரசர்: ரஜினிகாந்த் விளக்கம்

திருநாவுக்கரசர் மூலம் தான் சவுந்தர்யா திருமணம் நிச்சயம் ஆனது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

சென்னை: திருநாவுக்கரசர் மூலம் தான் சவுந்தர்யா திருமணம் நிச்சயம் ஆனது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார்.

அமெரிக்காவில் ரஜினியை திருநாவுக்கரசர் பார்த்ததாக சர்ச்சை வெளியானது. மேலும், இந்த சந்திப்பினால் கோபப்பட்ட ராகுல்காந்தி, திருநாவுக்கரசரை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ரஜினி தனக்கு 40 ஆண்டுகால நண்பர் என்பதால், அவரை சந்திக்க நான் அமெரிக்கா வரை செல்ல வேண்டியதில்லை என்று திருநாவுக்கரசர் கூறியிருந்தார்.

இந்த பரபரப்பான சூழலில், திருநாவுக்கரசர், ரஜினி, திருமாவளவன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. தமிழக அரசியல் களத்தின் பேசு பொருளாக இது மாறியது.

rajini

இந்த சந்திப்பு  குறித்து கூறிய திருமாவளவன், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. எதிர்பாரா விதமாக திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினியை சந்தித்ததாக விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, திருமாவளவன், திருநாவுக்கரசரை சந்தித்ததில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. திருநாவுக்கரசர் மூலம் தான் சவுந்தர்யா திருமணம் நிச்சயம் ஆனது என்பதால் அவருக்கு முதல் பத்திரிக்கை தந்தேன் என்றார்.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா கடந்த 2010-ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  தேவ் என்ற மகனும் இருக்கிறார். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். தொடர்ந்து, சவுந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் என்பவரை மறுமணம் செய்யவுள்ளார். சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் வருகிற 11-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.