என் மகளுக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது; போலீஸ் கான்ஸ்டபிள் கதறல்!

 

என் மகளுக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது; போலீஸ் கான்ஸ்டபிள் கதறல்!

தனது சக வயது சிறுவன் ஒருவனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹர்ஷாலி, எதிர்பாரா விதமாக எரியும் அந்த குப்பை குவியலில் விழுந்துள்ளார்

பெங்களூரு: எரியும் குப்பை குவியலில் தவறி விழுந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்து

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிவாஜி நகர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் லோகேஷப்பா. இவரது மகள் ஹர்ஷாலி (3). இக்குடியிருப்பில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் கடந்த 5-ம் தேதியன்று மாலையில் குடியிருப்பு வளாகத்தினுள்ளேயே எரிக்கப்பட்டுள்ளது. அப்போது, தனது சக வயது சிறுவன் ஒருவனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹர்ஷாலி, எதிர்பாரா விதமாக எரியும் அந்த குப்பை குவியலில் விழுந்துள்ளார்.

fire

அந்த சமயத்தில் குடியிருப்புக்குள் நுழைந்த நபர் ஒருவர் இதனைக் கண்டதும், அருகில் உள்ள பூத்தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்து சிறுமி மீது ஊற்றியுள்ளார். மேலும், சிறுமி அணிந்திருந்த நைலான் ஆடைகளை உடனே அவர் களைந்துள்ளார். இதற்குள்ளாக சிறுமியின் தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை உடனே அழைத்துச் சென்றுள்ளனர்.

பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

சுமார் 30 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை மேல் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் பேரில் அங்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 13-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தை கதறல்

இச்சம்பவம் குறித்த சிறுமியின் தந்தை உருக்கமாக பேசிய விவகாரம் போலீஸ் வாட்ஸ் ஆப் குழுக்களில் வைரலாக பரவியதை அடுத்து ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனது மகளுக்கு நேர்ந்த கொடூரம் வேறு யாருக்கும் நிகழ கூடாது என கதறும் சிறுமியின் தந்தை, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.

garbage

இது தொடர்பாக அப்பகுதி வாசிகள் கூறுகையில், நாள்தோறும் குடியிருப்பினுள் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கேயே எரிக்கப்படுகிறது. குப்பைகளை சேகரிப்பவர்கள் இங்கே உள்ள ஏழு இடங்களில் அதனை எரிக்கின்றனர். இதுகுறித்து பராமரிப்பு குழுவிடம் நாங்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் வாசிங்க

மக்களவை தேர்தல் 2019; திரிணாமூல் காங்., கட்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு