‘என் நாட்டுப்பற்றை சந்தேகிக்கிறார்கள்.. என் உழைப்பு வீணாகிவிட்டது’ – மிதாலி ராஜ் வேதனை

 

‘என் நாட்டுப்பற்றை சந்தேகிக்கிறார்கள்.. என் உழைப்பு வீணாகிவிட்டது’ – மிதாலி ராஜ் வேதனை

தனது 20 வருட கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிட்டதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஜோத்பூர்: தனது 20 வருட கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிட்டதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. இந்த முக்கியமான போட்டியில் சாதனை வீரர் மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை. இத்தனைக்கும் அந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தையே மிதாலி ராஜ் வெளிப்படுத்தியிருந்தார். அப்படி இருந்தும், அவரை அணியில் சேர்க்காமல் விட்டதே இந்தியா தோற்றதற்கான காரணமாக பார்க்கப்பட்டது.

அதன்பின், இந்திய அணி நாடு திரும்பியதும், மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரீம் ஆகியோரை சந்தித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். பின்னர், பிசிசிஐ-க்கு எழுத்து பூர்வமாக மிதாலி ராஜ் அளித்த கடிதத்தில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

ramesh powar

அந்த கடிதம் குறித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, “மிதாலி ராஜ் சொந்த சாதனைகளுக்காகவே விளையாடுகிறார். தன்னிச்சையாக செயல்படும் அவரை கையாள்வது கடினமாக இருந்தது. அதோடு இன்றி, இங்கிலாந்து அணிக்கு எதிராக குறைவான பேட்டிங் சராசரியும் வைத்திருந்ததால் தான் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்” என விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், தற்போது தன் ட்விட்டர் பக்கத்தில் மிதாலி ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன். கிரிக்கெட் மீது நான் கொண்ட ஈடுபாடும், நாட்டுக்காக 20 ஆண்டுகள் வியர்வை சிந்தி உழைத்த கடின உழைப்பும் வீணாகிவிட்டது. என் தேசப்பற்றை சந்தேகிக்கின்றனர். என் திறமை கேள்விக்கு உள்ளாகியுள்ளது. இது என் வாழ்வில் கறுப்பு நாள். கடவுள் தான் எனக்கு வலிமை தர வேண்டும்” என மிகுந்த வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.