என் கருத்துக்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி: சூர்யா அறிக்கை!

 

என் கருத்துக்களை ஆதரித்த  அனைவருக்கும் நன்றி: சூர்யா அறிக்கை!

ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி தன் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை:  ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி தன் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, புதிய கல்விக் கொள்கை குறித்தும், மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது என்றும் பேசினார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து  சூர்யாவின் பேச்சுக்கு  நடிகரும்  மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார். 

suriya

இந்நிலையில் ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே தன்னுடைய கேள்விகளை முன்வைப்பதாகக் கூறி நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

suriya

 

‘நீட் அறிமுகமான பிறகு, அகரம் மூலமாக அரசுப் பள்ளியில் படித்த ஒரேயோரு மாணவரைக் கூட மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியவில்லை. புதிய கல்வி கொள்கையில் எல்லாவிதமான பட்ட படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுக்கான பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது. உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை நுழைவு தேர்வுகள் துடைத்து எறிந்துவிடும்.

ஏழை கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற கல்விக் கொள்கையில் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பங்கேற்பையும் உறுதி செய்யவே, கல்வியாளர்களுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து வேண்டுகோள் வைத்தோம். அதற்கு கிடைத்த வரவேற்பு எங்களைச் நெகிழச் செய்தது.

கல்வியைப் பற்றிப் பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எதிர் கருத்துக்கள் வந்தபோது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வி நலன் மீது அக்கறை கொண்ட என் கருத்துக்களை ஆதரித்து அனைவருக்கும் நன்றி உங்கள் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து இயங்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. அரசியல் கட்சிகள் இயக்கங்கள், அமைப்புகள், கல்வி கொள்கை பற்றிய விவாதத்தை முன்னெடுத்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சமமான வாய்ப்பு தரமான கல்வியும் மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலை உணர்ந்த ஒரு குடிமகனாகச் சகமனிதன் ஆகவே என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்து நாட்டின் வளர்ச்சியிலும் மாணவர்களின் நலனிலும் அக்கறை கொண்ட கல்வியாளர்களுடன் உரையாடித் தெளிவைப் பெறுவோம். 

suriya

இந்த வரைவு அறிக்கை மீதான ஆக்கப்பூர்வமான கருத்துக்களைக் கல்வியாளர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் https://innovate.mygov.in/new-education-policy-2019/ என்ற இணையதளத்தில் இம்மாத இறுதிக்குள் பதிவு செய்து செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன். மத்திய அரசும் அனைத்து  தரப்பினர்  கருத்துக்களையும் கேட்டறிந்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன். ஏழை மாணவர்களுக்குக் கல்வியே உயரப் பறப்பதற்கான சிறகு.  அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம்’ இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.