என் உயிரை எமன் பறித்து விட முடியாது; எப்போது போகும் என கூறும் கருணாநிதி-வீடியோ

 

என் உயிரை எமன் பறித்து விட முடியாது; எப்போது போகும் என கூறும் கருணாநிதி-வீடியோ

சென்னை: எனது உயிரை எமன் பறித்து விட முடியாது எனச் சவால் விடுக்கும் திமுக தலைவர் கருணாநிதி, தனது உயிர் எப்போது? எதற்காகப் போகும் என்பதையும் அவரே தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என ஏராளமான தொண்டர்கள் மருத்துவமனை வாயிலில் நின்று எழுந்து வா தலைவா!!! என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனிடையே, அவரது உடல் நலன் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், வதந்திகளைத் தொண்டர்கள் நம்ப வேண்டாம் ஏன் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் அவரது உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், திமுக-வினர் உள்படக் கருணாநிதியை நேசிக்கும் பலரும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவர்களின் தொடர் சிகிச்சையையடுத்து அவரது உடல்நிலையில் மீண்டும் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் உற்சாகமடைந்தனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது எனக் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் கருணாநிதியை நேரில் சந்தித்த புகைப்படம் ஒன்றை திமுக வெளியிட்டது. அதில், அதில், கருணாநிதியின் கண்கள் திறந்திருப்பது போன்றும், அவரது காதில் ஸ்டாலின் ஏதோ கூறுவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மற்றவர்கள் கூறுவதை கருணாநிதி உணரும் வகையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள விஷயம் திமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் சங்க விழா ஒன்றில் திமுக தலைவர் கருணாநிதி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதில், எனது உயிரை எமன் பறித்து விட முடியாது எனச் சவால் விடுக்கும் திமுக தலைவர் கருணாநிதி, தனது உயிர் எப்போது? எதற்காகப் போகும் என்பதையும் அவரே தெரிவித்துள்ளார். அந்த விழாவில் கருணாநிதி பேசுகையில், தமிழை வாழ வைக்க வேண்டும்; தமிழர்களை இன்னும் நலமுடன் வாழ வைக்க வேண்டும் என்ற சுயநலத்துக்காக நான் வாழ வேண்டும் என விரும்புகிறேன். அந்த வகையிலே, எனது உயிரை எமன் பறித்து விட முடியாது எனச் சவால் விடுக்கிறார். மேலும் அவர் பேசும்போது மாமன்னன் கிள்ளிவளவன் உயிரிழப்பையும், அவரைக் காண ஓடி வந்த புலவர், கிள்ளிவளவனின் உடலைப் பார்த்து,”எமன் உன்னை எப்படிக் கொண்டு போயிருப்பான்? உறவினரை, உற்றாரைப் போலவோ வந்து உனது உயிரைக் கொண்டு போயிருக்க முடியாது. அல்லது பகைவனாக வந்தோ உனது உயிரைக் கொண்டு போயிருக்க முடியாது. உனது உயிரைப் பிட்சை கேட்டு, அதாவது; தமிழுக்காகப் பிட்சை கேட்டு உனது உயிரை எமன் கொண்டு போயிருக்க முடியும்” எனக் கவி பாடியதையும் சுட்டிக் காட்டும் கருணாநிதி, அப்படி உயிரைக் கொடுக்கும் காலம் வந்தாலே எனது உயிரைக் கொடுப்பேன். அல்லாமல், வேறு யாருக்கும் தர மாட்டேன். 100 ஆண்டுகளுக்கு மேலாக நான் உயிரோடிருப்பேன் என்கிறார். அதற்கு முன்பே எனது உயிரைக் கொடுக்க வேண்டும் என்றால், தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக, தமிழ் நாட்டுக்காக, தமிழ் இலக்கியத்துக்காகவே எனது உயிரைக் கொடுப்பேன் எனவும் அந்த வீடியோவில் கருணாநிதி நெகிழ்ச்சியாக பேசுகிறார்.