என்னை அரசியலுக்குள் விட்டுடாதே… கடவுளிடம் கெஞ்சிய ரஜினி..!

 

என்னை அரசியலுக்குள் விட்டுடாதே… கடவுளிடம் கெஞ்சிய ரஜினி..!

பலரும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…ஆண்டவா..எந்தச் சூழ் நிலையிலும் என்னை அரசியலுக்குள்ள விட்டுடாதே.

பலரும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…ஆண்டவா..எந்தச் சூழ் நிலையிலும் என்னை அரசியலுக்குள்ள விட்டுடாதே..’’என்று கூறிய பழைய சம்பவத்தை பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் நினைவுபடுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’அரசியல் ஈடுபாடு என்பது, நினைத்தால் ஏற்றி,புதுப்பித்துக் கொள்ளவும், தேவையில்லை என்றால், அணைத்துவிடக் கூடியதுமான தீபமல்ல! அது, அணையாத தீபமாக நெஞ்சில் கனன்று கொண்டிருக்க வேண்டிய நெருப்பு! அப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமே அரசியலில் வாய்ப்புகள் கதவைத் திறந்து தரும்! ஆனால்,ரஜினி மட்டும் எப்படி தேர்தல் அறிவிக்கட்டும். அது வரை அரசியல் மூச்சு,பேச்சே கூடாது என்று அமைதி காக்கிறார்! இந்த ரகசியத்திற்கு பின்புலத்தில் ஒரு அரசியல் திட்டம் இருக்கிறது..! அந்த திட்டப்படி அவர் இயக்கப்படுகிறார் என்பதே என் அனுமானம்…!

Rajini

கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக அவரது அசைவுகளை கவனித்து வருகிறேன்! உழைப்பாளி படத்தில், ’’நேற்று கூலி,இன்று நடிகன், நாளை எப்படி வருவேன்னு ஆண்டவனுக்குத் தான் தெரியும்…’’ என்று வசனம் பேசிய காலகட்டத்திற்கும் முன்பே.. ,அதாவது,1990 களிலேயே…,அன்றே அவரது ரசிகர்கள் அவருக்கு,’’ நாளைய முதல்வரே வருக என்று போஸ்டர் ஒட்டிய காலகட்டம் நினைவுக்கு வருகிறது…!

1992 ல் ஜெயலலிதாவிற்கு திரைத்துறையினர் நடத்திய பாராட்டுவிழா ஒன்றில்,’’பலரும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…ஆண்டவா..எந்தச் சூழ் நிலையிலும் என்னை அரசியலுக்குள்ள விட்டுடாதே..’’என்று சொன்னார்.

அந்த காலகட்டத்தில் உண்மையில் ரஜினி புகழின் உச்சத்தில் இருந்தார்.அவரது புகழ் பாடுவதற்கு என்றே அவரது பெயரில் எனக்கு தெரிந்து 13 பத்திரிகைகள் வந்தன. நக்கீரன் கோபால் ரஜினி ரசிகன் என்ற பத்திரிக்கையை நடத்தினார்.அதற்கு ரஜினியை போட்டோ எடுக்க என்னை ரஜினி வீட்டிற்கு அடிக்கடி அழைத்துச் செல்வார். நடிகனுக்காக பத்திரிகை நடத்த வேண்டுமா?என்று அவரிடம் கடிந்து கொள்வேன். அவரோ,ரஜினி ரசிகனால் தான் அவ்வப்போது நக்கீரனால் சில சமயங்களில் ஏற்படும் இழப்புகளை சாமாளிக்கிறேன் என்பார்.

1996 ல் நரசிம்மராவிடம், ரஜினியை மூப்பனார் அழைத்துச் சென்ற போதும், ரஜினி,’’காங்கிரசிலும் சேரமாட்டேன். தனிகட்சியும் ஆரம்பிக்கமாட்டேன். காங்கிரசுக்கு வாய்ஸ் வேண்டுமானால் தருவேன்’’ என்றதையும் நினைவு கூர்கிறேன்.

இந்த அளவுக்கு ரஜினி தன்னை வெளிப்படுத்திய பின்பு கூட, சோ கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தார்!
அது என்னவென்றால்,1996 தேர்தல் கருத்துக் கணிப்புக்காக நாங்கள் களம்கண்ட போது மக்களிடம் ’’ரஜினி அரசியலுக்கு வந்தால்,ஓட்டுப் போடுவீர்களா..?’’ என்ற கேள்வியை கேட்டு எழுதச் சொன்னார். அதன்படி நாங்கள் கேட்டதில், அன்றைய தினம் 60% வாக்காளர்கள் ரஜினி அரசியலுக்கு வந்தால் வாக்களிப்போம்..’’என்றனர்.Amit shah

னக்கு இது மிகவும் ஆச்சரியத்தை தந்தது! அந்த கருத்துக் கணிப்பை கையில் வைத்துக் கொண்டு, சோ, ரஜினியை துக்ளக் அலுவலகம் அழைத்துப் பேசினார். அவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், பலனில்லை என்பது புரிந்தது.

அதன் பிறகும் ரஜினி கணக்கற்றமுறை துக்ளக் அலுவலகம் வந்து சோவிடம் அரசியல் பேசிச் சென்றார். ஆனால், அவையெல்லாம் ஒரு பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சியான சந்திப்புகளாகவே தொடர்ந்ததேயல்லாமல், அந்த சந்திப்புகளை ரஜினி தன் அரசியல் ஈடுபாட்டிற்கான அச்சாரமாக்கும் முனைப்பை வெளிப்படுத்தியதே இல்லை என்பதை சோ சிற்சில சயங்களில் அலுவலகத்தில் பேசுவதைக் கொண்டு உணர்ந்து கொண்டேன்!

ஆகவே,சோவும் அவரை நிர்பந்திக்கவில்லை. ஜாலியாகப் பேசுவதோடு விட்டுவிடுவார்..! ரஜினியை குறித்த அப்சர்வேசனில், என்னுடைய புரிதல் என்னவென்றால், அவர் அதிகாரத்தை விரும்பவில்லை. ஏனெனில், அந்த அதிகார ஆசைக்கு பிரதியுபகாரமாக தன்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தை, விருப்பங்களை, நிம்மதியை இழக்க வேண்டும் என்பதை அவர் நன்கு புரிந்திருந்தார்!

அதற்கு தன் இயல்பு ஒத்துவராது…என்று அவர் உள்ளபடியே உணர்ந்தார். தனிமனித சுதந்திரத்தின் ஒவ்வொரு துளியையும் அவர், அணுஅணுவாக ரசித்து, அனுபவித்து சுவைப்பவர். நினைத்த நேரத்திற்கு நினைத்த நண்பர்களைத் தேடிச் சென்று அரட்டை அடிக்க வேண்டும்,சீட்டு விளையாட வேண்டும். மகிழ்ச்சியாக எந்த சுமையும் இல்லாமல் பொழுதை கழிக்க வேண்டும்! அல்லது முற்றிலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இமயமலை மாதிரியான இடங்களுக்கு சென்றுவிட வேண்டும் என்பதாகத் தான் அவரது வாழ்க்கை சென்று கொண்டுள்ளது.

சினிமாவில் விதவிதமாக நடிப்பதில் மட்டுமே அவர் ஆத்மார்தமான,ஈடுஇணையற்ற மகிழ்ச்சியடைகிறார். குடும்பச் சுமையாகட்டும்,ஒரு சாதாரண பள்ளி நிர்வாகமாகட்டும் எல்லாவற்றையும் முற்றிலுமாக அவர், திருமதி லதா ரஜினிகாந்திடமே ஒப்படைத்துவிட்டு, ஹாயாக வாழ்ந்து வருபவர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

என்ன பிரச்சினை என்றால்,படவியாபாரத்தின் பரபரப்புக்காகவும்,ஊடகங்களின் பேசுபடு பொருளாக இருப்பதை விரும்பியும், ரசிககர்களை உற்சாகப்படுத்தவும் அவர் அரசியல் ஈடுபாடு இருப்பது போல ஒரு பாவனை செய்து வந்தது தான் இப்போது அவருக்கு வினையாகிவிட்டது!

ஒரு பக்கம் படத் தயாரிபாளர்கள் பலனடைந்தார்கள் என்றால், மறுபக்கம் ,ஊடகங்கள் நன்கு தெரிந்தே மக்கள் எந்த தெளிவும் பெற்றுவிடாதபடி அவரது அரசியல் நுழைவுகளைக் குறித்து அவ்வப்போது புனைவுகளை எழுதி தங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொண்டன..!

கடைசியாக, அவர் தற்போது தன் திரையுலக பிரபலத்தைக் கொண்டு, தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் அரசியலை முடிவுக்கு கொண்டுவர விரும்பும் சக்திகளின் விடிவெள்ளியாகப் பார்க்கப்படுகிறார். அவரது, இயல்புகளை அனுசரித்து அவரை எப்படியேனும் அரசியலில் பயன்படுத்திக் கொள்வது என்று அவர்களும் இறங்கி செயல்பட்டுவருகின்றனர்.

அதாவது ,தேர்தல் அறிவிக்கப்படும் போது அவர் அரசியலுக்கு வந்தால் போதும் ,முதலமைச்சர் பதவி ஏற்றுக் கொண்டால் போதுமானது. மற்றவற்றை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்! தற்போது மோடி ,எப்படி பிரதமர் பொறுப்பை பற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், உலகமெல்லாம் ஜாலியாகச் சுற்றிவலம் வருகிறாரோ, அவரது பொறுப்புகளை மட்டுமின்றி, ஆட்சியின் ஒட்டுமொத்த பொறுப்புகளையும் எப்படி பிரதமர் அலுவலகத்தில் உள்ள சில சக்திகள் கையில் எடுத்து செய்கின்றனரோ.., அவ்விதமே ரஜினியும் இயக்கப்படுவார் என்பது தான் என் அனுமானம்!sonia

இதை ஜனநாயகத்தின் பெயரிலான மிகப் பெரிய ஆபாசமாகத் தான் நான் பார்க்கிறேன். அதாவது, ’’நீ,கல்யாணம் பண்ணிக் கொண்டால் போதுமானது, குடும்பம் நாங்கள் நடத்திக் கொள்வோம்’’என்பதைப் போன்றது. மீண்டும் இந்தக் கட்டுரையின் முதல் மூன்று வரிகளைப் படியுங்கள்..! அரசியல் என்பது அணையாத நெருப்பாக நெஞ்சில் கனன்று கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்!

அதனால் தான் எம்.ஜி.ஆருக்கு சாத்தியமானது! ஜெயலலிதாவிற்கு சாத்தியமானது. முக்கியமாக, யாராவது ஒரு எதிரியை அடையாளப் படுத்தி தீவிரமாக எதிர்ப்பு ஓட்டுகளை ’கன்சாலிடேட்’ செய்யத் தெரியாதவர்களுக்கு அரசியலில் வெற்றி, ஒரு போதும் சாத்தியப்படாது!

அந்த முனைப்பு ரஜினியிடம் ஒரு சிறிதும் இல்லை, அதை விட அவருக்கு முன்பு மக்களிடம் இருந்த அரசியல் ஆதரவும் தற்போது இல்லை! தனிப்பட்ட முறையில் அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால்,அவரது ’இன்ஸ்டண்ட்’ அரசியல் அபத்தமானது மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும்,சமுகத்திற்கும்,ஏன் அவருக்குமே கூட மிகவும் ஆபத்தானது !