என்னது ‘96’ திருட்டு கதையா? கோலிவுட்டில் படையெடுக்கும் ‘கதை திருட்டு’!

 

என்னது ‘96’ திருட்டு கதையா? கோலிவுட்டில் படையெடுக்கும் ‘கதை திருட்டு’!

காதலர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ‘96’ திரைப்படத்தின் கதையும் திருட்டு விவகார சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சென்னை: காதலர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ‘96’ திரைப்படத்தின் கதையும் திருட்டு விவகார சர்ச்சையில் சிக்கியுள்ளது.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘96’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வெற்றியை பெற்றது. பள்ளிப்பருவத்தில் நடந்த காதல் அனுபவத்தை பகிரும் வகையில் உருவாகியிருந்த இப்படத்தின் கதையை பலரும் அவர்களது சொந்த வாழ்வுடன் தொடர்புப்படுத்திக் கொண்டனர்.

இது தான் இப்படத்தின் வெற்றி என பலரும் கொண்டாடி வந்த நிலையில், இப்படத்தின் கதை திருடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடன் உதவி இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் என்பவர் இது தன்னுடைய கதை என்றும், பாரதிராஜா இயக்கத்தில், இசைஞானி இசையில் ‘பால்பாடி என்கிற பாரதி’ என்ற தலைப்பில் இந்த கதையை எடுக்க திட்டமிட்டதாக போர்க்கொடி தூக்கினார்.

96

இந்த கதை குறித்து 2013ம் ஆண்டே சுரேஷ் தன்னிடம் சொன்னதாகவும், ‘96’ படத்தின் கதை 90% சுரேஷின் கதை தான் என்றும் அதற்கு தான் தான் ஆதாரம் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்ததையடுத்து இந்த விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘96’ படத்தின் கதையை சுரேஷ் தனது நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார், அவர்கள் மூலம் இது மருதுபாண்டி என்பவருக்கு தெரியும் அவர் மூலம் தான் இந்த கதை பிரேம்குமாருக்கு சென்றிருக்க வேண்டும் என சுரேஷ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே, இவ்விவகாரம் குறித்து மனம் திறந்துள்ள இயக்குநர் பிரேம்குமார், ’96’ திரைப்படம் வெளியானதில் இருந்தே சமூக வலைத்தளங்களில் கதை தொடர்பான சர்ச்சை எழுந்தது. படத்தின் வெற்றியை அடுத்து சர்ச்சைகள் அதிகமாகின. இதனால் ‘96’ படத்தின் வெற்றியைக் கூட கொண்டாட முடியவில்லை என்றார்.

96

மேலும், சுரேஷின் இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. கதை என்னுடையது தான் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. இயக்குநர் இமயம் என்று கொண்டாடக் கூடிய பாரதிராஜா மீது பெரிய மரியாதை உள்ளது. ஆனால், அவர் கொச்சையான வார்த்தைகளால் தங்களை வசைப்பாடுவதை ஏற்க முடியாது. அதற்கு பதில் கூற வேண்டும் என பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.