‘எனது தந்தை எங்களை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார்’ : பாஜக எம்எல்ஏ மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

 

‘எனது தந்தை எங்களை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார்’ : பாஜக எம்எல்ஏ மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே வீட்டை விட்டு வெளியேறி காதலரை திருமணம் செய்துகொண்டார். 

உத்தரப்பிரதேசம்: பாஜக எம்.எல்.ஏவின் மகள் தன்னை கொலை செய்ய தனது தந்தை திட்டமிட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பித்தாரி செயின்பூர் தொகுதியின் பாஜக  எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா. இவரது மகள் சாக்ஷி மிஸ்ரா – அஜிதேஷ் குமார் என்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து  வந்துள்ளார். இதற்கு அவரது வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே வீட்டை விட்டு வெளியேறி காதலரை திருமணம் செய்துகொண்டார். 

 

இந்நிலையில் சாக்ஷி மிஸ்ரா சமூக வலைத்தளத்தில்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், ‘எங்கள் திருமணம் என் தந்தைக்கு பிடிக்கவில்லை. அதனால் சில ரவுடிகளை ஏவி எங்களை மிரட்டி வருகிறார். எனது தந்தை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதனால் எங்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஒருவேளை எங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து  ஏற்பட்டால் அதற்கு காரணம்  என் தந்தை தான். அப்படி நடந்தால் நான் அவரை விட்டுவிட மாட்டேன். கண்டிப்பாகச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தருவேன்’ என்று கூறியுள்ளார். 

சாக்ஷி மிஸ்ரா - அஜிதேஷ் குமார்

இதனையடுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் இன்று சாக்ஷி மிஸ்ரா – அஜிதேஷ் குமார்  சார்பில்  பாதுகாப்பு அளிக்கக் கோரி ஒரு பொதுநல மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.