எனக்கு போட்டி ரஜினி தான்; தென் சென்னையில் களமிறங்கும் பவர்ஸ்டார் அதிரடி!

 

எனக்கு போட்டி ரஜினி தான்; தென் சென்னையில் களமிறங்கும் பவர்ஸ்டார் அதிரடி!

எனக்கு என்றுமே போட்டி சூப்பர் ஸ்டார் ரஜினி தான் என தென் சென்னை மக்களவை தொகுதியில் களமிறங்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்

சென்னை: எனக்கு என்றுமே போட்டி சூப்பர் ஸ்டார் ரஜினி தான் என தென் சென்னை மக்களவை தொகுதியில் களமிறங்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டன.

தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும் எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட உள்ளார். அதிமுக சார்பில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் களமிறங்க உள்ளார். தேர்தல் களத்தில் அவர்கள் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

powerstar

இந்நிலையில், தென் சென்னை மக்களவை தொகுதியில் பவர் ஸ்டார் சீனிவாசன் அதிரடியாக களமிறங்கவுள்ளார். மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியின் சார்பில் பவர் ஸ்டார் சீனிவாசன், தென்சென்னை தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வேட்புமனுவும் தாக்கல் செய்யவுள்ளார்.

rajini powerstar

இந்திய குடியரசு கட்சியில் ஓராண்டுக்கு முன் சேர்ந்த பவர்ஸ்டார், அக்கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்து வருகிறார். தமிழகத்தில் எங்கள் கட்சி சார்பில் 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம் என தெரிவித்துள்ள பவர் ஸ்டார், பெண்களை மையப்படுத்திதான் என்னுடைய தேர்தல் பிரசாரம் இருக்கும். பெண்கள் பாதுகாப்பு, இடஒதுக்கீடு ஆகியவைதான் என்னுடைய தேர்தல் பிரசாரத்தின் மையப்புள்ளி என்றும் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி விவகாரம் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக தெரிவித்த பவர்ஸ்டார் பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

rajinikanth

எனக்கு என்றுமே போட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிதான். ரஜினி சந்திக்காத இந்தத் தேர்தலை பவர் ஸ்டார் சீனிவாசன் தைரியமாக சந்திக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.