எனக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எதுவும் கிடையாது: தம்பிதுரை

 

எனக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எதுவும் கிடையாது: தம்பிதுரை

எனக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என தம்பிதுரை கூறியுள்ளார்.

கரூர்: எனக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என தம்பிதுரை கூறியுள்ளார்.

மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பியுமான தம்பிதுரை கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடி நிதியை தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நான் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் வழங்கவில்லை. மத்திய அரசு தருகிற நிதியும் மக்களின் வரிப்பணம்தான். எனவே திட்டப்பணிகளை நிறைவேற்ற காலம் தாழ்த்தாமல் நிதியை வழங்கவேண்டும்.

பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் மத்திய அரசு அதற்கான நிதியை ஒதுக்கவில்லை. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்தது. ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்றால் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 கோடி ஒதுக்க வேண்டும்.

அப்படி ஒதுக்கும் பட்சத்தில் பாராளுமன்ற தொகுதியின் மற்ற பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை ஏற்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும். நிதி வரவில்லை என்றாலும் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கூறும் என்னை பா.ஜ.க.வை விமர்சிக்கிறேன் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி, என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். சுய பரிசோதனை என்ன? அனைத்து பரிசோதனையும் செய்ய தயார். அவரும் நாடு முன்னேற வேண்டும் என்று பாடுபடுகிறார். நானும் அது போல்தான். அவர் ஒரு கட்சியில் இருக்கிறார். நானும் ஒரு கட்சியில் இருக்கிறேன். மற்றப்படி தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக கருதவில்லை என்றார்.