எனக்கும் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றினார்கள்: சென்னை பெண் பரபரப்பு புகார்

 

எனக்கும் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றினார்கள்: சென்னை பெண் பரபரப்பு புகார்

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது போல் தனக்கும் ஏற்றப்பட்டது என சென்னை பெண் புகாரளித்துள்ளார்.

சென்னை: சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது போல் தனக்கும் ஏற்றப்பட்டது என சென்னை பெண் புகாரளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண்ணின் உடலில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாகவும், உடனே ரத்தம் ஏற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அதனையடுத்து, அருகில் உள்ள ஒரு ரத்த வங்கியில் இளைஞர் ஒருவர் தானமாக கொடுத்த ரத்தத்தை, பரிசோதித்துப் பார்க்காமல் கர்ப்பிணி பெண்ணின் உடலில் மருத்துவமனை ஊழியர்கள் ஏற்றியுள்ளனர். ஆனால், தானமாக பெறப்பட்ட ரத்தத்தில் எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது போல் கர்ப்பமாக இருந்த போது தனக்கும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது அதற்கான ஆதாரம் உள்ளது என சென்னையை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார், மேலும், னக்கு நேர்ந்த அநீதி குறித்து சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே, சென்னை பெண்ணின் புகார் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,சென்னை பெண் புகார் குறித்து ஆய்வு செய்துவிட்டு பின்னர் பதிலளிக்கிறேன் என கூறியுள்ளார்.

அதேசமயம், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் டீன் விஜயா இதுகுறித்து பேசுகையில், எச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றியதாக பெண் புகார் அளித்த விவகாரத்தில், அந்த பெண்ணிற்கு எச்.ஐ.வி பாதிப்பு இல்லை. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அளித்த ரத்தத்தில் எச்.ஐ.வி தொற்று இல்லை. அதேபோல் மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் ரத்த பரிசோதனை செய்ததற்கான ஆதாரமும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.