எந்த பக்கம் திரும்பினாலும் அடி மேல் அடி! ஜி.எஸ்.டி. வசூல் குறைந்ததால் கதிகலங்கிய மத்திய அரசு!

 

எந்த பக்கம் திரும்பினாலும் அடி மேல் அடி! ஜி.எஸ்.டி. வசூல்  குறைந்ததால் கதிகலங்கிய மத்திய அரசு!

கடந்த செப்டம்பர் மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) வசூல் 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூ.91,916 கோடியாக குறைந்துள்ளது.

2017 ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நடைமுறைக்கு வந்தது. அதுவரை இருந்து வந்த கலால், சேவை, வாட் உள்பட 17 வரிகளுக்கு மாற்றாகவும், நாடு முழுவதும் ஒரே விதமான வரி விதிப்பை செயல்படுத்தும் நோக்கில் ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டது. மாதந்தோறும் ஜி.எஸ்.டி. வரி வசூல் சுமார் ரூ.1 லட்சம் கோடி என்ற அளவில் இருந்து வந்தது. சில மாதங்களில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியையும் தாண்டியது.

ஜி.எஸ்.டி. வசூல்

இதனால் மத்திய, மாநில அரசுகளும் சந்தோஷமாக இருந்தன. ஆனால் கடந்த சில மாதங்களாக அதற்கு வேட்டு வைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வசூல் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூலாக ரூ.98,202 கோடி மட்டுமே கிடைத்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.91,916 கோடியாக வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் இது கடந்த 19 மாதங்களில் மிகவும் குறைவான வசூலாகும். பொருளாதார மந்தநிலை மற்றும் நுகர்வோர் தேவை குறைந்ததன் வெளிப்பாடே ஜி.எஸ்.டி. வசூல் குறைவு என காரணம் சொல்லப்படுகிறது.

ஜி.எஸ்.டி. வசூல் வீழ்ச்சி

ஏற்கனவே வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் டிவிடெண்ட் கேட்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. வாயிலான வருவாயும் குறைந்து வருவதால் மத்திய அரசு கலக்கத்தில் உள்ளது. மேலும் வருவாயை பெருக்க என்ன செய்யலாம் என மத்திய அரசு தீவிர யோசனை செய்து வருகிறது.பொருளாதா வளர்ச்சி, உற்பத்தி துறை வீழ்ச்சி என ஒரு பக்கம் மத்திய அரசுக்கு அடி விழும் சமயத்தில், வருவாய் நிலவரமும் தன் பங்குக்கு மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கியுள்ளது.