எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும்: மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

 

எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும்: மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும்; அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சென்னை: எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும்; அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருநாள் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் மகிழ்ச்சியுடன் இன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, “தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும்; அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும்!” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்துக்கு, தமிழன் பண்புக்கு, தமிழர் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்துக்கு ஏற்றவாறு ஒரு விழா, தமிழர் விழா ஒன்று உண்டென்றால் அது பொங்கல் விழா தான்’ என்றார் தந்தை பெரியார். ‘அன்று தொட்டு இன்றளவும் நம்மை அகமகிழச் செய்துவரும் பொன்னான விழாவாகப் பொங்கல் அமைந்துள்ளது’ என்றார் பேரறிஞர் அண்ணா.

தமிழ்ச் சமுதாயத்தின் முப்பெரும் தலைவர்கள் போற்றிய திருநாள் தான் தை முதல் நாள் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் திருநாள். எத்தனையோ விழாக்கள் உண்டு. அவை மதத்துக்கு மதம், சாதிக்கு சாதி, வட்டாரத்துக்கு வட்டாரம், ஊருக்கு ஊர் மாறுபடும், வேறுபடும். ஆனால், ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் இருக்கும் ஒரே விழா இதுதான். உயர்வு தாழ்வற்ற சமத்துவ விழா.

‘அகிலும் தேக்கும் அழியாக் குன்றும் அழகாய் முத்துக் குவியும் கடல்கள், முகிலும் செந்நெல்லும் முழங்கு நன்செய் முல்லைக்காடு மணக்கும் நாடு’ என்று பாரதிதாசனால் பாராட்டிப் போற்றப்பட்ட தமிழ்நாட்டுப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பொங்கல் திருவிழாவுடன் – தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கொண்டாடிட, 1921-ம் ஆண்டு தமிழ் புலவர்கள் கூடி முடிவெடுத்ததை 2006-2011 ஆட்சி காலத்தில் செயல்படுத்தியவர் கருணாநிதி. அதன்படி, தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். எதிர்கால நிலத்தில், நல்லாட்சி விளையட்டும், அதற்கான விவசாயம், இந்நாளில் தொடங்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.