எதற்காக தமிழகம் வருகிறீர்கள் மோடி? சாவு வீட்டில் ஓட்டு கேட்கவா

 

எதற்காக தமிழகம் வருகிறீர்கள் மோடி? சாவு வீட்டில் ஓட்டு கேட்கவா

இப்படி பிரதமரால் வேடிக்கை பொருளாக்கப்பட்ட தமிழகத்திற்கு ஏன் வருகிறீர்கள் மோடி, சாவு வீட்டில் ஓட்டு கேட்கவா? இறந்த வீட்டில் அரசியல் நடத்துவதுபோல மானங்கெட்ட பிழைப்பு என உங்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவரே கூறியிருக்கிறார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.

கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை தனது அசுர கரங்களால் அலசி போட்டிருக்கிறது. ஆனால் அதுகுறித்து பிரதமர் மோடி இதுவரை இரங்கல் தெரிவிக்கக்கூட வாய் திறக்கவில்லை. அவரது இந்த செயலை தமிழக மக்கள் மன்னிக்க முடியாத குற்றமாக கருதுகின்றனர். மோடி என்ற பெயர் தமிழக வரலாற்று சுவடில் தொடர்ந்து கரும்புள்ளியாகவே பதியப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் மக்கள் இல்லை; பிரதமரும் அவரது செயல்பாடும்தான்.

cry
இதனிடையே அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை பாஜக இப்போதிருந்தே ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில், தேர்தல் பொறுப்பாளர்களுடன் மோடி வீடியோ கான்பரென்சிங் மூலம் உரையாடி வருகிறார். தற்போது அவர் தேர்தல் பிரசாரத்திற்காக ஜனவரி மாத இறுதியில் தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

narenddera
இந்த தகவல் பாஜகவினருக்கு கொண்டாட்டமாக இருக்கலாம் ஆனால் தமிழக மக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் ஆட்சி செய்யும் நாட்டில் இருக்கும் ஒரு மாநில மக்கள் புயலால் சின்னாபின்னமாகி உள்ளனர். அதற்குரிய எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. தமிழக அரசு கேட்ட நிதியை அளிக்கவில்லை, மத்திய குழு வந்து ஆய்வு செய்து சென்றதோடு சரி அந்த அறிக்கை என்ன ஆனது என தெரியவில்லை. முதற்கட்டமாக  ரூ 353.70 கோடி ஒதுக்குவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் இங்கிருக்கும் அமைச்சரோ இதுவரை ஒரு பைசாக்கூட மத்திய அரசு தரவில்லை என்கிறார். அதற்கும் மேலாக, மத்திய அரசு நிதி இருந்தும் கொடுக்க மறுக்கிறது என தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையிடும் அளவிற்குத்தான் கஜா புயலில் மத்திய அரசின் செயல்பாடு இருக்கிறது என கொந்தளிக்கின்றனர் தமிழக மக்கள்.

gajaa
 ஆனால் பிரதமரோ ஒரு இரங்கல்கூட தெரிவிக்காமல், நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்தில் கலந்து கொள்கிறார் அரசு முறை பயணமாக அர்ஜெண்டினா செல்கிறார், உலகம் சுற்றுகிறார். ஆனால் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சொந்த நாட்டு மக்களை சந்திக்க அவருக்கு மனம் வரவில்லை எனில் பாஜக கூறுவதை போல் அவர் மக்களுக்கான பிரதமராக எப்படி இருப்பார்.

gaaaa
அதுமட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக தேர்தல் பொறுப்பாளர்களுடன் வீடியோ கான்பரென்சிங்கில் பேசும்போது கூட கஜா புயல் பாதிப்பு குறித்து ஒருவார்த்தை பிரதமர் பேசவில்லை. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிடம் இதுகுறித்து கேட்டால், அவரோ ”தமிழக மக்களா ஓட்டு போட்டு பாஜக ஆட்சிக்கு வந்தது” என சர்ச்சைக்குரிய வகையில் பதில் கேள்வி கேட்கிறார். எனவே ஓட்டு போடுபவர்களுக்கு மட்டும்தான் மோடி பிரதமராக இருப்பாரா இல்லை ஸ்டாலின் கூறியது போல் சேடிஸ்ட்டாகத்தான் இருப்பாரா? என மக்கள். கேள்வி எழுப்புகின்றனர்.

raja
கொடுமையின் உச்சம் என்பதே, ஒரு மாநில அமைச்சர், 10 லட்சம் பேர் இறந்தால்தான் மோடி தமிழகத்திற்கு வருவாரா? என பகிரங்கமாக கேட்கிறார். ஆனால் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ, இறந்த வீட்டில் அரசியல் நடத்துவதுபோல மானங்கெட்ட பிழைப்பு வேறு எதுவும் இல்லை என கொக்கரிக்கிறார். மத்திய அமைச்சரே, இறந்த வீட்டில் அரசியல் செய்வது குற்றம்தான் ஆனால் இறந்த வீட்டை எட்டிக்கூட பார்க்காதது அதைவிட பெருங்குற்றம். இது சாமானியர்களுக்கான அரசு, மோடி ஏழைகளுக்கான பிரதமர், அவர் ஏழைத்தாயின் மகன் என தொடர்ந்து கூறும் பாஜக தலைவர்களே, கஜாவால் வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாய் நின்றது, ஸ்டார் ஹோட்டல் ஓனர்களோ, கார்ப்பரேட் முதலாளிகளோ இல்லை அனைவரும் விவசாயிகள், ஏழைகள், சாமானியர்கள்.

radha
இந்தியா என்பதன் அடிப்படையே மக்களாட்சிதானே. ஆனால் சொந்த நாட்டு மக்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக அலைந்து கொண்டிருந்தனர். இதனை மத்திய பாஜக தலைமையும், மோடியும் வேடிக்கை மட்டும்தானே பார்த்துக்கொண்டிருந்தனர். இப்படி பிரதமரால் வேடிக்கை பொருளாக்கப்பட்ட தமிழகத்திற்கு ஏன் வருகிறீர்கள் மோடி, சாவு வீட்டில் ஓட்டு கேட்கவா? இறந்த வீட்டில் அரசியல் நடத்துவது மானங்கெட்ட பிழைப்பு என உங்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவரே கூறியிருக்கிறார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.