எச்.ஐ.வி ரத்தம்… சுகாதாரத்துறை செயலாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

 

எச்.ஐ.வி ரத்தம்… சுகாதாரத்துறை செயலாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரை: கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று இருக்கும் ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தமிழகத்தையே அதிரச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும்  ரத்தத்தை தானமாக வழங்கிய கமுதியை சேர்ந்த இளைஞர் குற்றவுணர்வு காரணமாக தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து அவருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுரையை சேர்ந்த அப்பாஸ்மந்திரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டார்.அவருக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிய வந்தது. தற்போது அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மன உளைச்சலால் அவதிப்படும் அவருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.