எங்க உடல் நலம் மீது அக்கறை இருந்தா…. நாங்க போராட்டம் நடத்தும் பகுதியில் கிளினிக் திறங்க…. ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்

 

எங்க உடல் நலம் மீது அக்கறை இருந்தா…. நாங்க போராட்டம் நடத்தும் பகுதியில் கிளினிக் திறங்க…. ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்

எங்க உடல் நலம் மீது அரசுக்கு அக்கறை இருந்தால் நாங்க போராட்டம் நடத்தும் பகுதியில் மொகல்லா கிளினிக் திறக்க வேண்டும் என ஷாஹீன் பாக் பேராட்டக்காரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம் நாட்டிலும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பதால் மக்கள் கூட்டம் உள்ள பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் அடுத்தவர்களுக்கு எளிதாக பரவி விடும். இதனால் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் பெண்களிம் போராட்டத்தை கைவிடும்படி அரசு வேண்டுகோள் விடுத்தது. 

ஷாஹீன் பாக் பெண் போராட்டக்காரர்கள்

ஆனால் ஷாஹீன் பாக் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். கொரோனா வைரஸை காட்டிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) ஆபத்தானது என அவர்கள் கூறினர். மற்றொரு பெண் ருக்சாத் கூறுகையில், டெல்லி அரசு பல்வேறு இடங்களில் மொகல்லா கிளினிக்குளை திறந்துள்ளது. எங்க உடல் நலம் மீது அரசுக்கு அக்கறை இருந்தால் நாங்கள் போராடும் இந்த பகுதியில் மொகல்லா கிளினிக் திறக்க வேண்டும் என தெரிவித்தார். 

ஷாஹீன் பாக் போராட்டத்தில் பெண்கள்

போராட்டக்காரர்களில் ஒருவரான 44 வயதான நூர்ஜஹான் கூறுகையில், எங்களை பற்றி அரசு கவலைப்படுகிறது என்றால் அவர்கள் ஏன் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவில்லை. இன்று அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற்றாலும் நாங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம். ஆனால் இதுவரை அரசு அதனை திரும்பபெறவில்லை. அதனால் எங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும் நாங்க தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தார். சோபியா என்ற பெண் கூறுகையில், கொரோனா வைரஸ் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுடன் போராட வேண்டும். சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. (தேசிய குடிமக்கள் பதிவேடு) ஆகியவை கொரோனா வைரஸை காட்டிலும் ஆபத்தானது. எனவே நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடருவோம். தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் எங்க போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்தார்.