எங்க அம்மாவுக்கு மட்டும் ஏதாவது நடந்தா அதுக்கு மத்திய அரசுதான் பொறுப்பு- மெகபூபா முப்தி மகள் எச்சரிக்கை

 

எங்க அம்மாவுக்கு மட்டும் ஏதாவது நடந்தா அதுக்கு மத்திய அரசுதான் பொறுப்பு- மெகபூபா முப்தி மகள் எச்சரிக்கை

எங்க அம்மாவுக்கு மட்டும் ஏதாவது நடந்தா அதுக்கு மத்திய அரசுதான் பொறுப்பு என காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மகள் இல்டிஜா ஜாவேத் டிவிட்டரில் எச்சரிக்கை செய்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு முன் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி முதல் காஷ்மீர் பல முக்கிய தலைவர்களை வீட்டு காவலில் வைத்தது. அதில் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியும் ஒருவர். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து வீட்டு காவலில் வைக்கப்பட்ட தலைவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். தற்போது ஜம்மு அண்டு காஷ்மீர்  மாநிலம், ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மலர்ந்து விட்டது.

மெகபூபா முப்தி

இருப்பினும், மெகபூபா முப்தி உள்பட சில தலைவர்கள் இன்னும் வீட்டு காவலிலிருந்து விடுவிக்கப்படவில்லை. அதேசமயம் அவர்களை உறவினர்கள், கட்சியினர் சந்தித்து பேச அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மெகபூபா முப்தி மகள் இல்டிஜா ஜாவேத் டிவிட்டரில், எனது அம்மாவின் நல்வாழ்வு குறித்து தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறேன். கடுமையான குளிர்காரணமாக எனது அம்மா தங்கும் இடத்தை மாற்றுங்கள் என ஒரு மாதத்துக்கு முன்பு ஸ்ரீநகர் மாவட்ட கமிஷனருக்கு கடிதம் எழுதினேன். என் அம்மாவுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு என பதிவு செய்து இருந்தார்.

பரூக் மற்றும் ஓமர் அப்துல்லா

மேலும், கடந்த மாதம் மாவட்ட கமிஷனருக்கு எழுதிய கடிதத்தையும் இடில்ஜா அதில் போஸ்ட் செய்து இருந்தார். வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா  மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் அமைதியை தொடர்ந்து பராமரிப்பதாகவும், சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடப்பதாகவும் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்கள் அது போன்று பத்திரத்தில் கையெழுத்திட மறுத்து விட்டதாக இடில்ஜா டிவிட்டரில் தெரிவித்து இருந்தார்.