எங்கள் ஆட்சியை கவிழ்க்க முடியாது: குமாரசாமி

 

எங்கள் ஆட்சியை கவிழ்க்க முடியாது: குமாரசாமி

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் – ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது என அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் சுழற்சி முறையில் காங்கிரஸூடன் முதல்வர் பதவியை குமாரசாமி பகிர்ந்து கொள்ள இருக்கிறார் என தகவல்களும் வெளியாகின. ஆனால் அதனை குமாரசாமி திட்டவட்டமாக மறுத்தார். இதற்கிடையே காங்கிரஸ் – ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயன்று வருவதாக தகவல்களும் வெளியாகின. 

இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. பாஜகவின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. நாங்கள் நல்லாட்சியை நடத்தி வருகிறோம். மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.