‘எங்களோடு நின்றதற்கு நன்றி’ இஸ்ரோவின் உணர்ச்சிபூர்வமான டிவிட்

 

‘எங்களோடு நின்றதற்கு நன்றி’ இஸ்ரோவின் உணர்ச்சிபூர்வமான டிவிட்

சந்திரயான் 2 பின்னடைவை சந்தித்தபோதும் இஸ்ரோவை நாட்டு மக்கள் அனைவரும் பாராட்டினர். இதனால் நெகிழ்ந்து போன இஸ்ரோ, ‘எங்களோடு நின்றதற்கு நன்றி’ என உணர்ச்சிபூர்வமாக டிவிட்டரில் பதிவு செய்துள்ளது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில், சந்தியான் 2வை கடந்த ஜூலை மாதம் விண்ணில் செலுத்தியது. சந்திரயான் 2 திட்டமிட்டப்படி தனது பயணத்தை தொடர்ந்து வந்தது. கடந்த 7ம் தேதி அதிகாலையில் நிலவில் சந்திரயான் 2 இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் நிலவின் மேற்பரப்புக்கு மேல் 2.1 கி.மீ. தொலைவில் விக்ரம் லேண்டர் இறங்கி கொண்டிருந்தபோது இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 மிஷன் பின்னடைவை சந்தித்தது.

சந்திரயான் 2

அதேசமயம் ஆர்பிட்டர் உதவியுடன் விக்ரம் லேண்டர் நிலவின் எந்தபகுதியில் இருக்கிறது என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள தீவிர முயற்சி செய்து வருகின்றனர். சந்திரயான் 2 திட்டம் பின்னடைவை சந்தித்த போதும் இஸ்ரோவை நாட்டு மக்கள் அனைவரும் பாராட்டினர். இஸ்ரோவுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்தனர். இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் நெகிழ்ந்து போயினர்.

இஸ்ரோ
 
இந்நிலையில், இஸ்ரோ உணர்ச்சிபூர்வமாக டிவிட்டரில் நன்றி தெரிவித்து பதிவு செய்துள்ளது. அதில், எங்களோடு நின்றதற்கு நன்றி. நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம்- உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளால் உந்தப்படுகிறது என இஸ்ரோ பதிவு செய்துள்ளது.