எகிப்து கப்பலில் உள்ள 18 தமிழர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

 

எகிப்து கப்பலில் உள்ள 18 தமிழர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

எகிப்துக்கு சுற்றுலா சென்ற 18 தமிழர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

கைரோ: எகிப்துக்கு சுற்றுலா சென்ற 18 தமிழர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் சென்னையை சேர்ந்த 18 பேர் கடந்த மாதம் 27-ஆம் தேதி 10 நாள் சுற்றுலாவாக எகிப்துக்கு சென்றனர். மேலும் ஏ-சாரா என்ற கப்பலில் நைல் நதியை சுற்றி பார்க்க அவர்கள் சென்றனர். அப்போது அந்தக் கப்பலில் தாய்லாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 171 சுற்றுலா பயணிகள் உடன் இருந்தனர்.

அவர்களில் தாய்லாந்தை சேர்ந்த ஒரு பயணிக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து எகிப்து நாட்டைச் சேர்ந்த மருத்துவ குழுவினர் கப்பலுக்கு விரைந்து வந்து அனைவருக்கும் சோதனை நடத்தினர். இதில் சென்னையை சேர்ந்த என்ஜினீயர் உள்பட 15 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் எகிப்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

ttn

மேலும் கப்பலில் உள்ளவர்கள் இறங்க எகிப்து நாட்டு அதிகாரிகள் 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான உணவு கப்பலுக்கே கொண்டு வந்து தரப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து எகிப்துக்கு சுற்றுலா சென்ற சென்னை என்ஜினீயர் உள்பட 18 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது முதற்கட்ட சோதனையில் உறுதியானது. இருப்பினும் அவர்கள் 15 நாட்கள் கப்பலிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 18 பேரின் உறவினர்களும் அவர்களை எகிப்தில் இருந்து மீட்டு இந்தியா அழைத்து வர மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.