ஊழல் புகாரில் முதல்வரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு: அதிமுக தகவல்!

 

ஊழல் புகாரில் முதல்வரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு: அதிமுக தகவல்!

முதலமைச்சர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐக்கு மாற்றிய வழக்கில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக பொன்னையன் தெரிவித்துள்ளார்.

சென்னை: முதலமைச்சர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐக்கு மாற்றிய வழக்கில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக பொன்னையன் தெரிவித்துள்ளார்.

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி முறைகேடு நடந்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்று அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், முதற்கட்ட விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும், முகாந்திரம் இருந்தால் முதல்வர் மீது வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உள்ளான முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக வேண்டும்  என ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் எழுப்பினர்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், “முதலமைச்சர் பழனிசாமி மீதான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து முடித்துவிட்ட நிலையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது தவறு. எனவே, அவர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். நெடுஞ்சாலை டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை” என தெரிவித்துள்ளார்.

அப்போது, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சிலர் உடனிருந்தனர்.