ஊர்க்காவல் படையினருக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: டிடிவி தினகரன் ட்வீட்!

 

ஊர்க்காவல் படையினருக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: டிடிவி தினகரன் ட்வீட்!

அவர்களோடு சேர்ந்து தன்னார்வப் படையான ஊர்க்காவல் படையினரும் அயராது பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நாளில் இருந்து, மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. கொரோனாவில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு விட்டன. இருப்பினும் நம் உயிரை காப்பாற்ற காவல்துறையும் மருத்துவத்துறையும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. அவர்களது சேவைக்கு, நாம் கொடுக்கும் எந்த கைமாறும் ஈடாகா. ஆங்காங்கே உணவின்றி, தூக்கமின்றி போலீசார் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களோடு சேர்ந்து தன்னார்வப் படையான ஊர்க்காவல் படையினரும் அயராது பணியாற்றி வருகின்றனர்.

tn

இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்,   ஊரடங்கு கண்காணிப்பு  பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் அவர்களுக்கு உதவியாக மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு ஊர்க்காவல் படையினரும்  பணிபுரிந்து வருகிறார்கள். ரோந்து பணி, வாகன சோதனை, பாதுகாப்பு போன்றவற்றில் காவல்துறையுடன் ஊர்க்காவல் படையினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்களின் பணியையும் அங்கீகரிக்கும் வகையில் காவல்துறையினருக்கு வழங்குவதைப் போல சிறப்பு ஊக்கத்தொகையினை ஊர்க்காவல் படையினருக்கும் வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.