ஊரே நஷ்டத்துல இருக்கு….. ஆனா இந்த கோடீஸ்வரர்களுக்கு மட்டும் கோடி கோடியா கொட்டுது…..

 

ஊரே நஷ்டத்துல இருக்கு….. ஆனா  இந்த கோடீஸ்வரர்களுக்கு மட்டும் கோடி கோடியா கொட்டுது…..

இந்த ஆண்டில் முதல் 7 மாதங்களில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.6 லட்சம் கோடியை இழந்துள்ளனர். ஆனால் அசிம் பிரேம்ஜி, முகேஷ் அம்பானி போன்ற கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மட்டும் கிடுகிடுவென உயர்ந்தது.

2019 ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாத காலத்தில் இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. அதேசமயம் மளமளவென கடும் சரிவையும் சந்தைகள் சந்தித்தன. இந்த காலத்தில் பங்குச் சந்தையால் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் அடைந்தனர். 

முகேஷ் அம்பானி

ஆனால், இதே காலத்தில் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, கோடக் மகிந்திரா வங்கியின் உதய் கோடக் ஆகியோரின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடி உயர்ந்தது. மேலும், அதானி குழுமத்தின் கவுதம் அதானி,  ஸ்ரீ சிமெண்ட் நிறுவனத்தின் பீனு கோபால் பான்குர் மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஷிவ் நாடார் ஆகியோரின் சொத்து மதிப்பும் உயர்ந்தது.

உதய் கோடக்

கடந்த 2ம் தேதி நிலவரப்படி, அசிம் பிரேம்ஜியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.21 ஆயிரம் கோடி உயர்ந்து ரூ.1.42 லட்சம் கோடியாக அதிகரித்தது. கடந்த ஜூலை 30ம் தேதி நிலவரப்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு சுமார் ரூ.20,500 கோடி அதிகரித்து ரூ.3.31 லட்சம் கோடியாக உயர்ந்தது. கோடக் மகிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர்  உதய் கோடக் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் இதுவரை ரூ.14 ஆயிரம் கோடி உயர்ந்து ரூ.93,800 கோடியாக (ஆகஸ்ட் 2 நிலவரம்) உயர்ந்தது.

அதேசமயம், ஸ்டீல் சக்கரவர்த்தி லெட்சுமி மிட்டல், வாடியா குழுமத்தின் தலைவர் நுஸ்லி வாடியா, ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர் நிறுவனத்தின் சாவித்ரி ஜிண்டால் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் பிர்லா போன்ற பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.