ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர மாநிலங்களுக்கு மூன்று கட்ட செயல்முறைகளை அறிவித்த டிரம்ப்

 

ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர மாநிலங்களுக்கு மூன்று கட்ட செயல்முறைகளை அறிவித்த டிரம்ப்

ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர மாநிலங்களுக்கு மூன்று கட்ட செயல்முறைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன்: ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர மாநிலங்களுக்கு மூன்று கட்ட செயல்முறைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கணக்கின்படி அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34,641-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 678,144 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், புதிய வெள்ளை மாளிகையின் வழிகாட்டுதல்கள் சாதாரண வர்த்தகம் மற்றும் சேவைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு அணுகுமுறையை கோடிட்டுக் காட்டுகின்றன. ஆனால் வலுவான கொரோனா சோதனை மற்றும் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களுக்கு மட்டுமே இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை நாட்டின் ஆளுநர்களுடன் இணைந்து சமூக விலகல் தேவைகளை எளிதாக்கும் தனது நிர்வாகத்தின் திட்டங்களை வெளியிட்டார். அவரது புதிய வழிகாட்டுதல்கள் கொரோனா வைரஸின் குறைந்த பரவல் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான வழியைத் தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைவாக காணப்படும் மற்றும் வலுவான கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் மூன்று கட்டங்களாக வணிகங்கள் மற்றும் பள்ளிகளை மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு கட்டமும் குறைந்தது 14 நாட்கள் நீடிக்கும். இதன் மூலம் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யும்.

USA

முதல் கட்டமாக ஊரடங்கு அமலில் இருக்கும் மாநிலங்களில் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இரண்டாம் கட்டத்தில், கொரோனா பாதிப்பு மீண்டும் ஏற்படாது என கருதப்படும் இடங்களில் மக்கள் அத்தியாவசியமற்ற பயணத்தை செய்ய கட்டுப்பாடு இல்லை. 50 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொண்ட பொதுக் கூட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் பகல்நேரத்தில் செயல்படும் மதுபான பார்களை வழக்கம்போல் இயங்கலாம்.

மூன்றாம் கட்டத்தின்படி தொடர்ந்து ஒரே அளவில் கொரோனா வைரஸ் பரவுவது குறைந்து வருவது தெரியும் இடங்களில் மக்கள் சக மக்களோடு பொது இடங்களில் சகஜமாக பழக அனுமதிக்கலாம். இருப்பினும் சமூக இடைவெளி அவசியமாக கடைபிடிக்கப்பட வேண்டும். மருத்துவமனைகள், பாதுகாப்பு இல்லங்கள், மதுபான பார்கள் எப்போதும்போல தடையின்றி இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் ஊரடங்கை தளர்த்தும் முடிவுகளை ஆளுநர்களே மேற்கொள்ளலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.