ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்… சந்திரசேகரராவ் கருத்தை மீண்டும் மொழிந்த ராமதாஸ்!

 

ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்… சந்திரசேகரராவ் கருத்தை மீண்டும் மொழிந்த ராமதாஸ்!

ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி வரும் நிலையில் அதே கருத்தை ராமதாசும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கருத்து தெரிவித்துள்ளார். ஏப்ரல் 7ம் தேதி முதல் கொரோனா இல்லாத மாநிலமாக தெலங்கானா மாறிவிடும் என்று கூறியிருந்த நிலையில், அங்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், மேலும் இரண்டு மாதம் அளவுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாமா என்ற அளவில் தெலங்கானா யோசித்து வருகிறது.

இது தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வெளியிட்ட கருத்தை பா.ம.க நிறுவனர் ராமதாசும் மறுமொழிந்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சந்திரசேகர ராவ் கருத்தை அப்படியே பதிவிட்டுள்ளார். அதில் “ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மை தான். எங்கள் மாநிலத்திற்கு ரூ.2400 கோடி வருமானம் கிடைக்க வேண்டிய நிலையில், ரூ. 6 கோடி மட்டும் தான் கிடைத்துள்ளது. பணம் போனால் அதை சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், உயிர் போனால் மீண்டும் வராது.

இந்தியா போன்ற போதிய மருத்துவக் கட்டமைப்பு இல்லாத நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே தீர்வு. ஆகவே ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் – திரு. சந்திரசேகர ராவ், (தெலுங்கானா முதலமைச்சர்)” என்று கூறப்பட்டுள்ளது.