ஊரடங்கை சிறப்பாக நிறைவேற்றும் பொறுப்பு இல்லத்தரசிகளுக்குத்தான் உள்ளது! – ராமதாஸ் ட்வீட்

 

ஊரடங்கை சிறப்பாக நிறைவேற்றும் பொறுப்பு இல்லத்தரசிகளுக்குத்தான் உள்ளது! – ராமதாஸ் ட்வீட்

ஊரடங்கு ஆணையை வெற்றிகரமாக நிறைவேற்றும் பொறுப்பு வீட்டு அளவில் இல்லத்தரசிகளுக்கே உள்ளது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். சிலர் விடுமுறை நாள் போல ஊர் சுற்றக் கிளம்புகின்றனர். அவர்களுக்கு போலீசார் நல்ல வரவேற்பு கொடுத்து அனுப்புகின்றனர். தொலைக்காட்சிகளில் இந்த காட்சிகளைப் பார்க்கும் மக்களுக்கு அடுத்த 20 நாட்கள் வெளியே செல்லும் எண்ணமே வராது. 

இந்த நிலையில், ஊரடங்கை சிறப்பாக அமல்படுத்த டாக்டர் ராமதாஸ் யோசனைகளை வெளியிட்டுள்ளார். அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “பொதுவெளியில் ஊரடங்கு ஆணையை வெற்றிகரமாக செயல்படுத்துவது காவல்துறையினரால் மட்டுமே சாத்தியமாகும். அவர்களின் பணி மிகவும் சிறப்பானது. வீடுகளை விட்டு எவரும் வெளியில் வராமலிருப்பதை உறுதி செய்யும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; மக்களைக் காக்க வேண்டும்!

குடும்பத் தலைவரும், குழந்தைகளும் வீட்டு வாசலை விட்டு வெளியே கால்களை எடுத்து வைக்க குடும்பத் தலைவிகள் அனுமதிக்கக் கூடாது. வெளியில் சென்றால் ‘‘கொரோனா நோயைக் கொள்முதல் செய்யப் போகிறீர்களா?’’ என்று எச்சரித்து தடுத்து நிறுத்த வேண்டும். கொரோனாவை விரட்டும் சக்தி பெண்கள் தான்!

ஆக்கும் சக்தியும், காக்கும் சக்தியும் பெண்கள் தான். கொரோனா பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு ஆணையை வீட்டு அளவில் செயல்படுத்தும் கடமையும், பொறுப்பும் இல்லத்தரசிகளுக்கு உண்டு. அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.