ஊரடங்கைத் தளர்த்துவதில் கவனம் வேண்டும்! – அரசுக்கு ராமதாஸ் ஆலோசனை

 

ஊரடங்கைத் தளர்த்துவதில் கவனம் வேண்டும்! – அரசுக்கு ராமதாஸ் ஆலோசனை

ஊரடங்கை 20ம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தலாம் என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில், தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஏப்ரல் 20ம் தேதி முதல் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதியில் ஊரடங்கை சற்று தளர்த்த மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. ஆனால், தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்துவது பற்றி தமிழக அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. மூன்று நாளில் புதிதாக கொரோனா நோயாளிகள் கண்டறியப்படாத மாநிலமாக தமிழகம் மாறிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், அவர் குறிப்பிட்ட அந்த நாளில் தமிழகத்தில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஊரடங்கை இன்னும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

representative image

இது குறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட்களில், “தமிழ்நாட்டில் ஊரடங்கை தளர்த்தும் விஷயத்தில் தமிழக அரசு மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, நோய்ப்பரவலுக்கு வழிவகுக்காத வகையில் அரசு முடிவெடுக்க வேண்டும்!

ramadoss

சென்னை மருத்துவர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நேற்று மட்டும் 3 மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பது கவலையளிக்கிறது. மருத்துவர்களின் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவர்களும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்!

கொரோனா நோயால் நேற்று ஒரே நாளில் 2 காவல் அதிகாரிகளும், 2 பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காலத்தில் களப்பணியாற்றுபவர்கள் எத்தகைய ஆபத்தான சூழலில் உள்ளனர் என்பதை இது காட்டுகிறது. இதை உணர்ந்தாவது ஊரடங்கை மீறி ஊர் சுற்றுபவர்கள் அடங்கி இருக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.