ஊரடங்கு தளர்வு கொரோனா தீவிரமாக பரவ வழிவகுக்கும்! – டாக்டர் ராமதாஸ் மீண்டும் எச்சரிக்கை

 

ஊரடங்கு தளர்வு கொரோனா தீவிரமாக பரவ வழிவகுக்கும்! – டாக்டர் ராமதாஸ் மீண்டும் எச்சரிக்கை

கொரோனா மூன்றாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்திருப்பது கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவாது. அதற்கு பதில், கொரோனா கூடுதல் தீவிரத்துடன் பரவுவதற்கான வழியை ஏற்படுத்தும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்திருப்பது கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவாது. அதற்கு பதில், கொரோனா கூடுதல் தீவிரத்துடன் பரவுவதற்கான வழியை ஏற்படுத்தும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (மே 4) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடந்த 40 நாட்களாக நடைமுறையில் இருந்து வந்த முதல் இருகட்ட ஊரடங்கு நிறைவடைந்து, தளர்வுகளுடன் கூடிய மூன்றாவது ஊரடங்கு இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இது கொரோனா பரவலுக்குச் சாதகமாகவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பாதகமாகவும் இருக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், அனைவரும் கூடுதல் விழிப்புடன் இருப்பது அவசியமாகிறது.

corona-patients-mp

தமிழ்நாட்டில் முதல் இரு கட்ட ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்றைய நிலவரப்படி சென்னையில் 1,458 பேர், தமிழகத்தின் பிற பகுதிகளில் 1,565 பேர் என ஒட்டுமொத்தமாக 3,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 107 மட்டும்தான் குறைவு. அதாவது 6.83% மட்டும்தான் குறைவு. ஒட்டுமொத்த தமிழகமும், சென்னையும் ஒன்றுதான் என்று கூறும் அளவுக்கு சென்னையில் கொரோனா வைரஸ் நோய்ப்பரவல் உச்சத்தை அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி, கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக அதிகாரபூர்வமாக 200க்கும் மேற்பட்டோரும், அதிகாரபூர்வமற்ற வகையில் இன்னும் பல மடங்கு கூடுதலானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona-patient

இத்தகைய சூழலில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் நோய்ப் பரவலைத் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய சூழலில், இருக்கும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டிருப்பது சரியல்ல. இத்தகைய சூழலில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் சவாலாக அமையப் போகிறது.
மூன்றாம் கட்ட ஊரடங்குக்கான விதிகளின்படி சென்னையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையும், உணவு விடுதிகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும், கட்டுமானப் பொருட்கள் கடை முதல் மின்சாரக் கருவிகள் வரையிலான தனிக்கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் திறக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தனியார் அலுவலகங்கள் முதல் மென்பொருள் அலுவலகங்கள் வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால், சென்னை மாநகரம் கிட்டத்தட்ட இயல்புநிலைக்கு வந்து விட்டது போலவே தோற்றமளிக்கிறது. சென்னையில் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இந்தத் தளர்வு பொருந்தாது என்று தமிழக அரசு அறிவித்திருந்தாலும் அதனால் எந்தப் பயனும் ஏற்படும் என்று தோன்றவில்லை. ஏனெனில் சென்னை கடல் என்றால் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் கடலில் கரைத்த பெருங்காயம் ஆகும்.

lockdowntamilnadu.jpg

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தக் கடையும் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும், அவை மிகச்சிறிய பகுதிகள் தான். அந்தப் பகுதிகள் தொடங்கும் இடத்திலும், முடியும் இடத்திலும் கடைகள் திறந்திருக்கும் என்பதால் அப்பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது. அரசு, காவல்துறை ஆகியவையும், பாமகவும் கிளிப்பிள்ளைக்கு கூறுவதைப் போல எடுத்துக் கூறியும் கடந்த சில வாரங்களில் லட்சக்கணக்கான மக்கள் கோயம்பேடு சந்தையில் குவிந்ததுதான், சென்னையில் நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்ததற்குக் காரணம் ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், அதற்கான அறிகுறிகள் இல்லாமல் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், புதிய தளர்வுகள் நிச்சயமாக ஆக்கபூர்வமான பலன்களைக் கொடுக்காது; மாறாக, கொரோனா நோய் கூடுதல் தீவிரத்துடன் பரவுவதற்குதான் வழிவகுக்கும் என்பது உண்மை.

சென்னையிலும், புறநகர் மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கை தமிழக அரசு கடுமையாக்கி இருக்க வேண்டும். அதற்கு எந்தத் தடையும் இல்லை. மத்திய அரசு கூட, அது பிரகடனப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது என்றுதான் கூறியிருக்கிறதே தவிர, கூடுதலாக கடுமையாக்கக் கூடாது என்று கூறவில்லை. இத்தகைய சூழலில், மத்திய அரசின் உத்தரவுகளை அப்படியே கடைப்பிடிக்கிறோம் என்று கூறி, மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு இருந்தது போன்ற சூழலை மாநில அரசு ஏற்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது. சென்னையில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, இனியாவது ஊரடங்கை கடுமையாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.

koyambedu-market-67

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாக இருக்கும் நிலையில், நாம் விட்டில் பூச்சிகளாக இருக்கப் போகிறோமோ, விவரமானவர்களாக இருக்கப் போகிறோமா? என்பதுதான் இன்றைய நிலையில் சென்னைவாசிகள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய கேள்வி ஆகும். ஊரடங்கும், முழு ஊரடங்கும் இருந்த காலத்தில்தான் சென்னையில் கொத்து கொத்தாக கொரோனா பரவல் ஏற்பட்டது. இப்போதும் கூட ஒரே குடும்பத்தில் 15 பேருக்கு கரோனா, ஒரே தெருவில் 54 பேருக்கு கொரோனா என்று செய்திகள் வெளியாகிவரும் நிலையில், ஊரடங்கு தளர்வு காலத்திலும் நோய்ப்பரவாமல் தடுப்பது நாம் கடைப்பிடிக்கப்போகும் சுயகட்டுப்பாட்டில்தான் உள்ளது.

எனவே, சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்ட மக்கள் இன்று முதல் அடுத்து வரும் 14 நாட்களை ஊரடங்கைத் தளர்வு காலமாகக் கருதாமல், தண்டனைக் காலமாக கருதி வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இக்காலத்தில் கூடுதல் பொறுப்புடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும். அப்போது தான் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியும் போதாவது புதிய தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்”  என்று கூறியுள்ளார்.