ஊரடங்கில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு! 24 நாட்களில் இத்தனை புகாரா?

 

ஊரடங்கில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு! 24 நாட்களில் இத்தனை புகாரா?

ஊரடங்கு நேரத்தில் பெண்கள் மீது நடக்கும் வன்முறை தொடர்பாக 24 நாட்களில் மட்டும் சுமார் 2963 புகார்கள் வந்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் ஊரடங்கு முடியும் வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்லாமல் குடும்பத்தோடு வீட்டிலேயே இருக்கும் சிலர்,  பெண்கள் மீது தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு கொடுமைபடுத்துவதாக  தொடர்ந்து புகார்கள் வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தெரிவிக்கின்றனர். பெண்கள் மீது வன்முறை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி எச்சரிக்கை விடுத்திருந்தார். 

பெண்களுக்கு எதிரான வன்முறை

கடந்த 24 நாட்களில் மட்டும் குடும்ப பெண்கள் மீது வன்முறை தொடர்பாக சுமார் 2963 புகார்கள் தொலைபேசி மூலமாகவும், காவலன் செயலி மூலமாகவும் பெறப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு  காவல்துறை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புகார்களில் இதுவரை 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு அதில் 2 பேரை கைது செய்துள்ளதாகவும், மீதமுள்ள நபர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இதில் 738 குடும்பத்தினரிடம் போலீசார் சமாதானமாக பேசி சேர்த்து வைத்து அனுப்பியுள்ளனர். மேலும் 1132 புகார்களை குறைதீர்க்கும் முகாமில் குறைகேட்டு  தீர்வு காண வைத்துள்ளனர். மேலும் 557 புகார்களை விசாரித்து வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமில்லாமல் ஏற்கனவே குடும்ப வன்முறையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு  எச்சரித்து உள்ளனர். குறிப்பாக பெண்கள் மீதான வன்முறையை கண்காணிக்க அனைத்து மாவட்டத்திலும் ஏ.டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மீதான வழக்குகளை விசாரிக்கவும், வழி நடத்தவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை ஜெயஸ்ரீ மற்றும் கயல்விழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் குழந்தைகள் மீதான நடக்கும் குற்றங்களையும் கண்காணித்து வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை தெரிவித்துள்ளனர்.