ஊரடங்கால் சொந்த ஊருக்கு 150 கி.மீ நடந்து சென்ற சிறுமி உயிரிழப்பு

 

ஊரடங்கால் சொந்த ஊருக்கு 150 கி.மீ நடந்து சென்ற சிறுமி உயிரிழப்பு

ஊரடங்கு காரணமாக சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு தெலங்கானாவில் இருந்து நடந்தே சென்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹைதராபாத்: ஊரடங்கு காரணமாக சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு தெலங்கானாவில் இருந்து நடந்தே சென்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடங்கள் மற்றும் வேலை இல்லாமல் போனதால் வெகு தொலைவில் உள்ள தங்கள் வீட்டுக்கு செல்வதற்காக ஊரடங்கு காலத்தில் நடந்தே செல்ல ஆரம்பித்தனர். நீண்ட பயணங்கள் காரணமாக பலர் இதனால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தனது குடும்பத்திற்காக சம்பாதிக்க மிளகாய் வயல்களில் பணிபுரிந்த ஜாம்லோ மக்தாம் என்ற 12 வயது சிறுமி தெலுங்கானாவிலிருந்து சத்தீஸ்கரில் உள்ள தனது சொந்த பிஜப்பூர் மாவட்டத்திற்கு நடந்தே செல்ல ஆரம்பித்துள்ளார். அவருடன் பணிபுரிந்த 11 பேருடன் ஏப்ரல் 15 அன்று அவர் நீண்ட பயணத்திற்கு புறப்பட்டார். சொந்த ஊருக்கு சீக்கிரம் சென்றடைய இந்த குழு நெடுஞ்சாலை வழியாக பயணிக்காமல் மூன்று நாட்கள் காடுகள் வழியாகவே நடந்து சென்றனர். அவர்கள் சுமார் 150 கி.மீ தூரம் பயணித்திருக்கையில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் சிறுமிக்கு வயிற்றில் வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனால் சிறுமியின் உடல் ஆம்புலன்சில் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த சிறுமிக்கு கொரோனா சோதனை செய்ததில் அவருக்கு நோய்த் தொற்று ஏற்படவில்லை என தெரியவந்தது. நீண்ட தூரம் நடந்ததால் கடுமையாக நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அச்சிறுமி இறந்ததாக மருத்துவர்கள் கூறினர். மேலும் சிறுமி பயணித்த குழுவின் சில உறுப்பினர்கள் கூறுகையில் அச்சிறுமி நன்றாக சாப்பிடவில்லை என்று கூறினர். இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் சிறுமியின் சொந்த ஊருக்கு 14 கி.மீ தொலைவில் அவர் இறந்தார் என்பது தான். இன்னும் ஒருமணி நேரம் நடந்தால் அவரது கிராமத்திற்கு சென்றிருப்பார். இந்த நிலையில், சிறுமியின் குடும்பத்திற்கு மாநில அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.