ஊரக வேலைத் திட்டத்தில் கூலி பாக்கி ரூ.1000 கோடி! மீண்டும் மன்னிப்பு கேட்கும் நிலை வேண்டாம்… மார்க்சிஸ்ட் கம்யூ எச்சரிக்கை

 

ஊரக வேலைத் திட்டத்தில் கூலி பாக்கி ரூ.1000 கோடி! மீண்டும் மன்னிப்பு கேட்கும் நிலை வேண்டாம்… மார்க்சிஸ்ட் கம்யூ எச்சரிக்கை

ஊரக வேலைத் திட்டத்தில் இரண்டரை மாதமாக சம்பள பாக்கி உள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு நேரத்தில் மக்களை கூலி பாக்கி கேட்டு அல்லாட விடுவது மிகக் கொடூரமானது என்றும் ரூ.1000 கோடி பாக்கியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நிலுவைத் தொகை வழங்க சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு ரூ.4431 கோடியை விடுவித்தது. ஆனால், தமிழகத்துக்கு மட்டுமே ரூ.1000 கோடி அளவுக்கு பாக்கி உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  

“கோவிட்-19, இந்தியா முழுமையும் கிராமப்புற உழைப்பாளி மக்களின் வாழ்க்கையைத் தலைகுப்புறப் புரட்டிப்போட்டிருக்கிற வேளை இது. கடும் நெருக்கடி மூழ்கடிக்கிற நிலையிலும் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் குரூரமான வஞ்சனைக்கு உள்ளாக்கப்படுவதை அதிர்ச்சியோடும் அக்கறையோடும் உங்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

இரண்டு நாட்களாக இந்தியா முழுவதும் நகர்ப்புற அமைப்புசாரா புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கிற அவலங்கள் எல்லோரையும் உலுக்கிக் கொண்டிருக்கின்றன. அரசின் எந்த அறிவிப்பும் நிவாரணமும் எட்டாத நிலையில் அவர்கள் பல்லாயிரக்கணக்கில் பல நூறு கிலோமீட்டர்களை கடந்து சொந்த மாநிலங்களுக்கு, சொந்த ஊர்களுக்குக் கால்நடையாகவே திரும்புகிற துயரத்தை நாடு கண்டு வருகிறது. இப்பின்புலத்தில் இந்திய பிரதமரோ, ” என்னை மன்னித்துவிடுங்கள்” என்று பேசவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் இதே நிலைமை கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. வாழ்வாதாரத்திற்கான எல்லா வழிகளும் அடைபட்டுள்ள சூழலில் மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தின் கூலி இரண்டரை மாதங்களாக வழங்கப்படவில்லை என்பது அநீதி அல்லவா? தமிழகத்தில் ஜனவரி 13ம் நாளிலிருந்து அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலிபாக்கி ரூ 671 கோடி; பொருளாகத் தரவேண்டிய பாக்கி ரூ 300 கோடி. மொத்தம் ரூபாய் 1000 கோடியைத் தொடுகிறது. இதுநாள் வரை மத்திய அரசிடமிருந்து இதற்கான நிதி வந்து சேரவில்லை.

ஒரு புறம் நாள்கூலி ரூ.20 உயரும் என்ற அறிவிப்பு. மறுபக்கம் செய்த வேலைக்கு கூலி இரண்டரை மாத பாக்கி என்பது வேதனையான முரண் அல்லவா? வேலை அட்டை வைத்திருப்பவர்களில் 7 சதவீதம் பேருக்கே 100 நாள்களும் வேலை கிடைக்கிறது என்ற வழக்கமாக உள்ள வஞ்சனை. தற்போது இவ்வளவு நெருக்கடி மிக்க காலத்திலும் கூலிபாக்கிக்கு அவர்களை அல்லாடவிடுவது மிகக்கொடூரம். இதற்காக ஓர் மன்னிப்பை இந்திய பிரதமர் கேட்கிற நிலைமை வரக்கூடாது எனக் கருதுகிறேன். 

வெறும் வார்த்தைகள் போதாது. அவற்றால் பசித்த வயிறு நிரம்பாது. உங்களின் உடனடிக் கவனம் தேவைப்படுகிற பிரச்சினை இது. ஏழை, எளிய மக்களின் உயிர்வாழ்கிற உரிமை குறித்த ஒன்று. தமிழகக் கிராம உழைப்பாளி மக்களுக்கு நிலுவையாக உள்ள ரூ.1000 கோடியை இனியும் காலவிரயம் இன்றி உடனே அனுப்பிவைத்து கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.