ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி! இம்மாதம் 31ம் தேதி முதல் 2 நாட்கள் நாடு முழுவதும் வங்கிகள் ஸ்டிரைக்…..

 

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி! இம்மாதம் 31ம் தேதி முதல் 2 நாட்கள் நாடு முழுவதும் வங்கிகள் ஸ்டிரைக்…..

ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், இம்மாதம் 31ம் தேதி மற்றும் பிப்ரவரி 1ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி யூனியன்கள் அழைப்பு விடுத்துள்ளன.

வங்கி பணியாளர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். 9 வர்த்தக யூனியன்களின் பிரதிநிதித்துவ அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் சம்பள உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 13ம் தேதியன்று சம்பள உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்றது. 

வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம் (கோப்பு படம்)

வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் வங்கி பணியாளர்களுக்கு 15 சதவீதம் சம்பள உயர்வு கோரியது. ஆனால் 12.25 சதவீதம்தான் ஊதியத்தை உயர்த்த முடியும் இந்திய வங்கிகள் சங்கம் உறுதியாக கூறி விட்டது. இதனால் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து, இம்மாதம் 31ம் தேதி முதல் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்துள்ளது.

வங்கிகள் வேலை நிறுத்தம்

இது தொடர்பாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சித்தார்தா கான் கூறுகையில், நாங்கள் குறைந்தபட்சம் 15 சதவீதம் ஊதியத்தை உயர்த்தும்படி கோரிக்கை விடுத்தோம் ஆனால் இந்திய வங்கிகள் சங்கம் 12.25 சதவீதம் உயர்த்த முடியும் கூறியது. இது நியாயமே இல்லை. எனவே இம்மாதம் 31ம் தேதி மற்றும் அடுத்த 1ம் தேதி நாடு தழுவிய அளவில் வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 11 முதல் 13ம் தேதி வரை 3 நாட்கள்  வேலை நிறுத்தத்தை நடத்த உள்ளோம். மேலும், ஏப்ரல் 1ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.