உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிகழ்ச்சியில் 18 மாத கைக்குழந்தையை சுமந்தபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீஸ்

 

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிகழ்ச்சியில் 18 மாத கைக்குழந்தையை சுமந்தபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீஸ்

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், பெண் போலீஸ் ஒருவர் தனது 18 மாத கைக்குழந்தையை தோளில் அணைத்தப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.1,452 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். யோகி ஆதித்யநாத்தின் வருகையை முன்னிட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நூற்றுக்கணக்கான போலீசாரில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள தாத்ரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் ப்ரிதி ராணியும் ஒருவர்.

யோகி ஆதித்யநாத்

நேற்று காலை 6 மணி முதல் ப்ரிதி ராணி தனது ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். யோகி ஆதித்யநாத் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து விட்டு மதியம் 12.30 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதுவரை தனது கைக்குழந்தையை தோளில் போட்டு ஒரு கையால் அணைத்தப்படி ராணி பணியில் இருந்தார்.

மகனுடன் பெண் போலீஸ் ப்ரிதி ராணி

20 வயதான பெண் போலீஸ் ப்ரிதி ராணி இது குறித்து கூறுகையில், எனது கணவருக்கு பரீட்சை இருந்ததால், குழந்தையுடன் அவரால் இருக்க முடியவில்லை. வேறுவழியில்லாததால் நான் அவனை (மகனை) கவனித்துக்கொள்ள வேண்டியது இருந்தது. பணியும் முக்கியம் என்பதால் எனது குழந்தையை இங்கு கொண்டு வந்தேன். ப்ரிதி ராணி தனது கைக்குழந்தையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சம்பவம் தற்போது இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.