உள்ளூர்காரங்க கை விட்டாலும், வெளியூர்காரங்க கை விடல- 17.93 லட்சம் இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்த நிறுவனங்கள்

 

உள்ளூர்காரங்க கை  விட்டாலும், வெளியூர்காரங்க கை விடல- 17.93 லட்சம் இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்த நிறுவனங்கள்

இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில் இந்திய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மொத்தம் 17.93 லட்சம் வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன. இது சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 4 சதவீதம் அதிகமாகும்.

நம் நாட்டில் கடந்த பல மாதங்களாக வாகன விற்பனை மிகவும் மந்தகதியில் உள்ளது. எப்போதும் ஸ்கூட்டர்  மற்றும் மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் விற்பனை நன்றாக இருக்கும். ஆனால் தற்போது அதன் விற்பனையும் கடும் சரிவு கண்டுள்ளது. இந்திய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் வரையிலான 6 மாதத்தில் 96.96 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 1.15 கோடி இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.

பஜாஜ் பைக்

உள்நாட்டில் விற்பனை சரிவு கண்டபோதிலும், வெளிநாட்டில் விற்பனை அதிகரித்துள்ளது. 2019 ஏப்ரல்-செப்டம்பர்  காலத்தில் இந்திய இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மொத்தம் 17.93 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளன. சென்ற ஆண்டின் இதே காலத்தில் இந்நிறுவனங்கள் 17.23 லட்சம் வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்து இருந்தன. ஆக இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி 4 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

டி.வி.எஸ். இருசக்கர வாகனங்கள்

செப்டமபர் வரையிலான 6 மாத காலத்தில் அதிகபட்சமாக பஜாஜ் ஆட்டோ (9.34 லட்சம்), டி.வி.எஸ். மோட்டார் (3.43 லட்சம்), இந்தியா யமஹா மோட்டார் (1.58 லட்சம்), ஹீரோ மோட்டோகார்ப் (92,823) மற்றும் சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா (54,372) உள்ளிட்ட நிறுவனங்கள் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளன.