உள்ளூரில் விலை போகாத ஏர்இந்தியாவை வெளியூர்காரன் தலையில் கட்ட தயாராகும் மத்திய அரசு….

 

உள்ளூரில் விலை போகாத ஏர்இந்தியாவை வெளியூர்காரன் தலையில் கட்ட தயாராகும் மத்திய அரசு….

ஏர் இந்தியா நிறுவனத்தை எப்படியேனும் தனியாருக்கு தாரை வார்த்தே தீர வேண்டும் என்பதற்காகவே, மத்திய பட்ஜெட்டில் அன்னிய நேரடி முதலீடு விதிமுறைகள் தளர்வு அறிவிக்கப்பட்டதாக தகவல்.

விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் பொதுத்துறையை சேர்ந்த ஏர்இந்தியா நிறுவனம் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. நிறுவனத்தை தொடர்ந்து நடத்தினால் நமக்கு நஷ்டம்தான் என மத்திய அரசு நினைக்கிறது. பேசாமல் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்து விட்டால் நமக்கு தலைவலி இல்லை என மத்திய அரசு கருதுகிறது. 

அன்னிய நேரடி முதலீடு

ஏர் இந்தியா நிறுவனத்தில் 74 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முதலில் நடவடிக்கை எடுத்தது. ஆனால், அந்நிறுவனத்தின் கடன் சுமை, சர்வதேச சந்தையில் விமான பெட்ரோல் விலை நிலவரம் மற்றும் சில விதிமுறைகள் உள்ளிட்ட சில காரணங்களால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் அல்லது நிறுவனங்கள் ஏர் இந்தியாவை விலைக்கு வாங்க முன்வரவில்லை.

ஆனாலும், ஏர் இந்தியாவை கை கழுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இனி அந்நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்துவிட முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் விமான போக்குவரத்து துறையில் அன்னிய நேரடி முதலீடு விதிமுறைகள் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முன்வருவார்கள் என மத்திய அரசு கணக்கு போடுகிறது.

ஜெட் ஏர்வேஸ்

அன்னிய நேரடி முதலீடு விதிமுறை தளர்வால், ஏர் இந்தியாவை தவிர திவால் நடவடிக்கையில் உள்ள ஜெட் ஏர்வேஸ்  நிறுவனம் விரைவில் விலை போக வாய்ப்புள்ளது.