உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் எகிறிய மம்தா பானர்ஜி

 

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் எகிறிய மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தொண்டர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே தொலைபேசியில் வார்த்தைப் போரே நிகழ்ந்துள்ளது. 

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தொண்டர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே தொலைபேசியில் வார்த்தைப் போரே நிகழ்ந்துள்ளது. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. மாநில தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள கந்தி நகரில் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய பாஜக தொண்டர்களுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டு, பாஜகவினரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக தெரிகிறது. 

இந்த நிலையில், அன்று நடைபெற்ற அந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த வன்முறை சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த மம்தா, “பாஜகவினரை முதலில் நீங்கள் கட்டுப்படுத்துங்கள்” என கோபமாகப் பேசியுள்ளார். மேலும், மாநிலத்தின் அமைதியை கெடுக்க வேண்டுமென அவர்கள் திட்டமிட்டு செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மம்தா, மாநிலத்தின் அமைதியை நிலைநாட்ட தங்களுக்கு தெரியும் எனவும் கூறியதாக தெரிகிறது.