உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம் ராஜினாமா

 

உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம் ராஜினாமா

உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம் ஜனவரி மாத இறுதியுடன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்

நியூயார்க்: உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம் ஜனவரி மாத இறுதியுடன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

உலக வங்கியில் 189 நாடுகளை உறுப்பினராக உள்ளன. அரசுகளுக்கான நிதி உதவி அளிக்கும் மிகப்பெரும் அமைப்பாக உள்ளது. வளர்ச்சி திட்டங்கள், திட்டங்களுக்காக குறைந்த விலையில் கடன் அளித்தல் ஆகிய பணிகளை உலக வங்கி செய்து வருகிறது. உலக வங்கியின் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கும் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்களே பெரும்பாலும் அதன் தலைவர்களாக  இருந்துள்ளனர்.

இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தென்கொரியா நாட்டை சேர்ந்த ஜிம் யாங் கிம் உலக வங்கியின் 12-வது தலைவராக கடந்த 2012-ஆம் ஆண்டில் பதவியேற்றார். இவரது நான்காண்டு பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து 2016-ஆம் ஆண்டில் உலக வங்கியின் தலைவராக மீண்டும் அவர் நியமிக்கப்பட்டார்.

இவரது பதவி காலத்தில் உலகை அச்சுறுத்தும் பல்வேறு சவால்களை திறம்பட சமாளித்து சிறப்பாக செயலாற்றியதால், மீண்டும் அவரை அப்பதவியில் நியமிப்பதாக அமெரிக்க நிதித்துறை அப்போது அறிவித்தது.

இந்நிலையில், உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம் ஜனவரி மாத இறுதியுடன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் கால அவகாசம் உள்ள நிலையில், திடீரென இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

உலக வங்கியின் அடுத்த தலைவரை அவ்வங்கியின் இயக்குநர்கள் குழு தேர்வு செய்யும். அதுவரை, உலக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான கிறிஸ்டாலினா ஜார்ஜிவியா, தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என உலக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.