உலக சினிமா கொண்டாடும் பாகுபலியை மட்டமாக பேசிய இசைஞானி!

 

உலக சினிமா கொண்டாடும் பாகுபலியை மட்டமாக பேசிய இசைஞானி!

உலகளவில் ரசிகர்களை கவர்ந்த ‘பாகுபலி’ படம் குறித்து இசைஞானி இளையராஜா கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

சென்னை: உலகளவில் ரசிகர்களை கவர்ந்த ‘பாகுபலி’ படம் குறித்து இசைஞானி இளையராஜா கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படங்கள் இந்திய சினிமாவின் பெருமையை உலகளவில் உயர்த்தியதாக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்-தெலுங்கு-ஹிந்தி மொழிகளில் எடுக்கப்பட்ட இப்படம் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகி விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக இமாலய வெற்றிப்பெற்றது.

பாகுபலி

இந்நிலையில், இசையுலகில் உலகளவில் புகழ்பெற்ற இசைஞானி இளையராஜா, உலக ரசிகர்கள் போற்றும் பாகுபலி திரைப்படத்தை மட்டப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். சமீபகாலமாக தன் மனதிற்கு பிடித்த படங்களை மட்டும் தேர்வு செய்து இசையமைத்து வரும் இசைஞானி, ’பாகுபலி’ படம் குறித்து பிரபல வார இதழின் கேள்வி பதிலில், ‘பாகுபலி 1, 2 படங்களை பார்த்து வியந்தீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதில், தமிழ் சினிமா உணர்ச்சிப்பூர்வமானது, அதில் நடிகர்கள் தங்களது நடிப்பினை வெளிப்படுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு கிராபிக்ஸை வைத்து படத்தை பிரம்மாண்டமாக எடுப்பதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது. கிராபிக்ஸ் என்று தெரிந்து அதை பார்த்து ஏன் பிரமிக்க வேண்டும்? வியக்க வேண்டும்? என்றார். கிராபிக்ஸால் எதையும் செய்ய முடியும் என்றாகிவிட்டது. தொழில்நுட்பத்தை எப்படி கலையாக பார்க்க முடியும்?. கலை என்றால் அதில் ஃபெர்பார்மன்ஸ் இருக்க வேண்டும். கலைஞர்கள் தங்களது திறமையினால் அதனை நிகழ்த்திக்காட்ட வேண்டும்.

இளையராஜா

கலை மற்றும் கிராபிக்ஸை ஒப்பிடுவதால், ஒரு விஷயத்தை நினைவுப்படுத்துகிறேன். இண்டியானா ஜோன்ஸ் படத்தில் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி, சேஸிங் காட்சிகளை தொடர்ந்து 20 நிமிடம் படமாக்கினர். அதில் நடித்த நடிகர்களும் சிறப்பாக நடித்திருப்பார்கள். அப்படிப்பட்ட கலைஞர்களை பாராட்டலாம். ஆனால், இந்த கிராபிக்ஸில் எந்த கலைஞரை பாராட்ட முடியும்? தொழிலை பற்றி தெரிந்தவர்களை இந்த மாயாஜால வித்தைகளை காட்டி ஏமாற்ற முடியாது. தெரியாதவர்கள் ஏமாந்து தான் போகின்றனர் என்று இளையராஜா கூறியுள்ளார்.

உலகளவில் ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்டு வைத்துள்ள இசைஞானி, அனைவரும் வியந்து பாராட்டும் ஒரு திரைப்படம் குறித்து இதுபோன்ற கருத்தை தெரிவித்திருப்பது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.