உலக கோப்பை ஹாக்கி: முதன்முறையாக பெல்ஜியம் அணி சாம்பியன் பட்டம்

 

உலக கோப்பை ஹாக்கி: முதன்முறையாக பெல்ஜியம் அணி சாம்பியன் பட்டம்

உலக கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை பெல்ஜியம் அணி கைப்பற்றியது

ஒடிசா: உலக கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை பெல்ஜியம் அணி கைப்பற்றியது.

உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. லீக், காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் முடிந்து நேற்றிரவு இறுதி போட்டி நடைபெற்றது.

அதில், நெதர்லாந்து – பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்றது. இதில் நெதர்லாந்து தங்களது 5 வாய்ப்பில் 2 கோல்களை போட்டது. பெல்ஜியம் அணி தங்களது முதல் 4 வாய்ப்பில் 2 கோலடித்த நிலையில், கடைசி வாய்ப்பை அந்த அணியின் ஆர்தர் டி ஸ்லோவர் கோலாக மாற்றினார்.

ஆனால், நெதர்லாந்து தரப்பில் அது சரியான கோல் அல்ல என்று அப்பீல் செய்யப்பட்டது. டி.வி. ரீப்ளேயில் ஆர்தரின் காலில் பந்து லேசாக பட்ட பிறகே வலைக்குள் செல்வது தெரியவந்தது. இதனால் அது கோல் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. எனவே, ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலை நீடித்தது. இதைத் தொடர்ந்து ‘சடன்டெத்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதன் முதல் வாய்ப்பை பெல்ஜியம் வீரர் புளோரென்ட் வான் ஆவ் பெல் கோலாக்கினார். பின்னர் நெதர்லாந்து வீரர் ஜெரோன் ஹெட்ஸ்பெர்ஜர் பந்துடன் இலக்கை நோக்கி முன்னேறிய போது அவரது முயற்சியை பெல்ஜியம் கோல் கீப்பர் முறியடித்தார்.

இறுதியாக, பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்து, உலக கோப்பையை கைப்பற்றியது. உலக கோப்பை ஹாக்கி வரலாற்றில் பெல்ஜியம் அணி சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.