உலகிலேயே உயரமான ராமர் சிலை….. ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது உ.பி அரசு

 

உலகிலேயே உயரமான ராமர் சிலை….. ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது உ.பி அரசு

உத்தரபிரதேசத்தில் அமைய இருக்கும் ராமர் சிலையின் மாடலை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

லக்னோ: உத்தரபிரதேசத்தில் அமைய இருக்கும் ராமர் சிலையின் மாடலை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

குஜராத்தில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 182 அடியில் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலையை திறந்து வைத்தார். இந்தியாவில் வறுமையின் பிடியில், பசியால் வாடும் ஏராளமான மனிதர்கள் இருக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் படேலுக்கு ரூ 3,000 கோடியில் சிலை வைப்பது என்பது தேவையற்றது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் சிலை வைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டு இருக்கிறார். அயோத்தியில் சராயு நதிக்கரை ஓரத்தில் இந்த ராமர் சிலை வைக்கப்பட உள்ளது. தற்போது இந்த சிலையின் அதிகாரப்பூர்வ மாடல் வெளியாகியுள்ளது. இது 221 மீட்டர் உயரம் கொண்டது. இதன் காலுக்கு கீழ் உள்ள மேடை 50 மீட்டர் உயரமும், உடல் 151 மீட்டர் உயரும், மேலே கிரீடம் 20 மீட்டர் உயரமும் கொண்டது ஆகும்.

இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், அயோத்தியில் நிச்சயம் ராமர் சிலை அமைக்கப்படும், உத்தரப்பிரதேசத்தில் ராமர் சிலையை அமைப்பதற்கான இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றார்.

ram

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஏற்கனவே ராமர் கோயில் பிரச்னை எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அயோத்தியில் ராமர் சிலை அமைப்பது தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். மேலும், பிரம்மாண்ட சிலை அமைய இருக்கும் இதே உத்தரபிரதேசத்தில்தான் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் ஏராளமான பிஞ்சு குழந்தைகள் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 

முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரம்மாண்ட சிலைக்கு பெரிய தொகை செலவழிப்பதைவிட தன் மாநில மக்களின் வாழ்வாதாரத்தை  உயர்த்தும் வகையில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அந்த தொகையை செலவழிக்கலாம். ராமர் சிலைக்கு பெரிய தொகையை செல்வழிப்பது தேவையற்ற ஒன்று எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.