உலகின் முதல் 5ஜி மொபைல் பிராசஸர் அறிமுகம் – இந்தியாவில் 5ஜி அறிமுகம் எப்போது?

 

உலகின் முதல் 5ஜி மொபைல் பிராசஸர் அறிமுகம் – இந்தியாவில் 5ஜி அறிமுகம் எப்போது?

உலகின் முதல் 5ஜி மொபைல் பிராசஸரான குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹோனோலூலு: உலகின் முதல் 5ஜி மொபைல் பிராசஸரான குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹவாய் தீவுகளில் குவால்காம் தொழில்நுட்ப மாநாடு நேற்று தொடங்கியது. இது நாளை வரை (டிச.06) நடக்கிறது. இந்நிலையில், ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் குவால்காம் நிறுவனம் உலகின் வர்த்தர ரீதியிலான முதல் 5ஜி மொபைல் பிராசஸரை அறிமுகம் செய்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 என அழைக்கப்படும் இந்த பிராசஸர் 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் 5ஜி வசதியை வழங்கும்.

ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் உடன் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் மற்றும்குவால்காம் QTM052 எம்.எம். வேவ் ஆன்டெனா மாட்யூல்கள் மற்றும் இதர சிக்னல் உபகரணங்களுடன் இணைக்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போன் வடிவமைப்பாளர்கள் புதிய சாதனங்களை வடிவமைக்க வாய்ப்புகளை வழங்குவதோடு 5ஜி சேவையை 6 ஜிகாஹெர்ட்ஸ்க்கும் குறைவான எம்.எம் வேவ் பேன்ட்களை வழங்குகிறது.

2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா, ஐரோப்பியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி சேவை வழங்கப்பட உள்ளது. அதேசமயம் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா மற்றும் லத்தின் அமெரிக்காவில் 5ஜி சேவை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரில் 4-ஆம் தலைமுறை ஆன்-டிவைஸ் ஏ.ஐ என்ஜின், முந்தைய தலைமுறை மொபைல் பிராசஸரை விட மும்மடங்கு சிறப்பான ஏ.ஐ செயல்திறன், ட்ரூ 4K HDR வீடியோ பதிவு செய்யும் வசதி, 3D சோனிக் சென்சார், உலகின் முதல் வர்த்தக ரீதியிலான அல்ட்ராசோனிக் விரல்ரேகை சென்சார் வசதி ஆகியவற்றை கொண்டிருக்கிறது.

இந்த ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் 7 நானோமீட்டர் ஃபேப்ரிகேஷன் மூலம் உருவாகி இருக்கிறது. உலகின் முதல் கம்ப்யூட்டர் விஷன் ஐ.எஸ்.பி இந்த பிராசசரில் வழங்கப்பட்டு இருப்பதால், புகைப்படம் மற்றும் வீடியோக்களை அதிக தரத்தில் படமாக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.