உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

 

உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

நான்மாடக்கூடல் நகரமான மதுரையில் தினந்தோறும் திருவிழா தான் என்றாலும் சித்திரை திருவிழா தான் அங்கு மிகவும் பிரசித்தம். மீனாட்சி திருக்கல்யாணமும் மறுநாள் நடக்கும் தேரோட்டமும், அதை தொடர்ந்து சித்திரா பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் மதுரைவாசிகளுக்கு எப்போதும் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும்.

அழகர் மலையில் இருந்து மதுரை வந்து ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து விட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்து விட்டு மீண்டும் அழகர் மலைக்குத் திரும்பும் வரை ‘சாமி இன்னிக்கு எங்கே இருக்குது?’ என்பதே சித்திரைத் திருவிழாவில் மதுரைக்கு வரும் மக்களின் முக்கியமான கேள்வியாக இருக்கும்.தன் தங்கை ஸ்ரீமீனாட்சிக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் கல்யாணம் நடக்கும்போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீஅழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபவத்தைப் பார்க்க அழகர் மலையில் இருந்து இறங்கி சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார். வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை காண முடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்துடன் அவர் வைகையில் எழுந்தருகிறார் என்கிறது புராண கதை.

Madurai Kallazhagar

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மதுரை புராதான திருவிழாவான வைகை ஆற்றில் அழகரை இறக்கும் நிகழ்வு இந்தாண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ள்ளது. தமிழக முதலமைச்சரின் உத்தரவையடுத்து விழாவை ரத்து செய்வதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.