உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுமா இந்திய அணி?; விராட் கோலி அதிரடி பதில்!

 

உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன்  விளையாடுமா இந்திய அணி?;  விராட் கோலி அதிரடி பதில்!

புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தான் அணியுடனான போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பை: புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தான் அணியுடனான போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் தேதி பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த தாக்குதல் பாகிஸ்தானின் துணையோடு தான் அரங்கேறியுள்ளது. தீவிரவாத குழுக்களை அந்நாடு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

pulwama

அதே சமயம் இந்திய கிரிக்கெட் அணியானது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இருப்பினும் புல்வாமா தாக்குதலைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தானுடன்  விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விதமான தொடர்புகளையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

bcci

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து   பிசிசிஐ  நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய்,’ பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளோம். 2-வதாக இனிமேல் தீவிரவாத தொடர்பு வைத்திருக்கும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நேரடி போட்டிகளைத் திட்டமிட வேண்டாம் என்று கூறியுள்ளோம்’ என  தெரிவித்தார்.

இந்நிலையில் 2019 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டி குறித்து பேட்டியளித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாகிஸ்தான் அணியுடனான போட்டி குறித்து இந்திய அரசும், பிசிசிஐயும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்’ என்றார்.

rajnath singh

முன்னதாக இது குறித்து கருத்து தெரிவித்திருந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுடன் வர்த்தகமோ, விளையாட்டோ எதுவும் இனிமேல் நடக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.