உயர் சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு: மாநிலங்களவையில் நிறைவேறுமா?

 

உயர் சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு: மாநிலங்களவையில் நிறைவேறுமா?

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது

டெல்லி: உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

நாடு முழுவதும் சமூகம் மற்றும் கல்வி ரீதியாகப் பின் தங்கியவர்களுக்கான  இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த இடஒதுக்கீடானது 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் திராவிட இயக்கங்களின் கடும் சட்டப் போராட்டங்களுக்கு பின்னர், 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசைப் பொறுத்தவரை, தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் என 49.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி வருகிறது. ஆனால், ஜாட், படேல் என உயர் சாதிகளாக கருதப்படும் சாதிகள் தங்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து, உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது. தொடர்ந்து, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 15, 16-வது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெஹலட் தாக்கல் செய்தார். மக்களவையில் 323 வாக்குகள் ஆதரவாகப் பெற்று மசோதா நிறைவேறியுள்ளது.

இந்த மசோதா சமூகத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் சமூகநீதியை உறுதி செய்யும். வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த மசோதாவானது நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. மக்களவையில் ஆளும் பாஜக-வுக்கு பெரும்பான்மை உள்ளதால் அங்கு எளிதாக மசோதாவை அக்கட்சி நிறைவேற்றி விட்டது. ஆனால், மாநிலங்களவையில் அக்கட்சி க்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால், அங்கு நிறைவேற்றுவது அவ்வளவு எளிதாக இருக்காது.