உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிரான திமுக மனு மீது இன்று விசாரணை

 

உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிரான திமுக மனு மீது இன்று விசாரணை

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மது மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது

சென்னை: உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மது மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முடிவெடுத்த மத்திய அரசு, இது தொடர்பான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த மசோதாவானது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு திமுக உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாவுக்கு எதிராக மாநிலங்கள் அவையில் திமுக எம்.பி., கனிமொழி பலத்த எதிர்ப்பை மாநிலங்களவையில் பதிவு செய்தார். எனினும், 165 வாக்குகள் ஆதரவாகவும், 7 வாக்குகள் எதிராகவும் பெற்று இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

ஆனால், பொருளாதார அடிப்படையில் நலிந்த பிரிவினர் என்பதற்கான அளவுகோல் குறித்து சர்ச்சை எழுந்தது. மேலும், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதாவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மசோதாவுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல. பொதுப்பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது என்பது இயற்கை நீதிக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.