உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

 

உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

புதுடெல்லி: உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

நாடு முழுவதும் சமூகம் மற்றும் கல்வி ரீதியாகப் பின் தங்கியவர்களுக்கான  இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த இடஒதிக்கீடானது 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் திராவிட இயக்கங்களின் கடும் சட்டப் போராட்டங்களுக்கு பின்னர், 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதாக கூறப்படும் உயர் சாதி ஏழைகளுக்கு, பொதுப்பிரிவில் இருந்து 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இந்த தீர்மானத்தை மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மாநில கட்சிகள் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள மத்திய அரசின் இந்த போக்கிற்கு, திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.