உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு மசோதா: வரும் கல்வி ஆண்டு முதல் அமல்!

 

உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு மசோதா: வரும் கல்வி ஆண்டு முதல்  அமல்!

நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அமலாகிறது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

புதுதில்லி: நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அமலாகிறது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதாக கூறப்படும் உயர் சாதி ஏழைகளுக்கு, பொதுப்பிரிவில் இருந்து 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இந்த தீர்மானத்தை மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது. இதையடுத்து  இந்த தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அதன்படி ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குக் குறைவானவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் கல்வியாண்டு முதல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்குக் கல்வி நிறுவனங்களில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.