உயரும் காங்கிரசின் கை! மூழ்கும் பா.ஜ.க.வின் தாமரை…

 

உயரும் காங்கிரசின் கை! மூழ்கும் பா.ஜ.க.வின் தாமரை…

இந்த ஆண்டு அரசியலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி கடும் எழுச்சியை சந்தித்துள்ளது. அதேசமயம் மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க. பல மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பெரும்பான்மைக்கான இடங்களை காட்டிலும் அதிக இடங்களை கைப்பற்றி தொடர்ந்து 2வது முறையாக பா.ஜ.க. ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. ஆனால் அதன்பிறகு அந்த கட்சிக்கு நேரம் சரியில்லை என்றே தெரிகிறது. இந்த ஆண்டில் மட்டும் 2 மாநிலங்களில் தனது ஆட்சியை பா.ஜ.க. பறிகொடுத்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் தனது ஆட்சியை இழந்துள்ளது. அரியானாவில் கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்து ஆட்சியை தக்கவைத்து கொண்டது. இல்லையென்றால் அந்த மாநிலத்திலும் ஆட்சியை இழந்து இருக்கும்.

பா.ஜ.க.

இந்த ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 105 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 2014ம் ஆண்டைக் காட்டிலும் 17 இடங்கள் குறைவு. அரியானாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் முந்தைய தேர்தலை காட்டிலும் 7 இடங்கள் குறைந்தது. தற்போது ஜார்க்கண்டில் பா.ஜ.க.வின் வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கை 37லிருந்து 25ஆக குறைந்துள்ளது. ஆக மாநில தேர்தலை பொறுத்தவரை பா.ஜ.க.வின் நிலவரம் பவுர்ணமி தேய்ந்து அமாவாசை ஆன கதையாக உள்ளது.

ராகுல், மோடி

அதேசமயம், மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பெரும் உத்வேகம் கொடுத்துள்ளது. அந்த கட்சியே எதிர்பாராத வகையில் அதிக இடங்களை வென்றுள்ளது.மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு கூடுதலாக 2 இடங்கள் கிடைத்தது. அரியானாவில் காங்கிரஸ் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை கூடுதலாக 16 இடங்களை கைப்பற்றியது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் தொகுதிகளின் எண்ணிக்கை 6லிருந்து 16ஆக உயர்ந்துள்ளது.